சரும பளபளப்பிற்கு வாழை!

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தினை சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி பலருக்கு தெரியாது. உண்மையில் வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும். இதில் உள்ள மற்ற சத்துக்கள் அதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

* இயற்கை குளுக்கோஸ் என்று கொண்டாடப்படும் வாழைப்பழம் நமக்கு வைட்டமின் ‘ஏ’ மற்றும் வைட்டமின் ‘ஈ’ சத்துக்களைத் தருகிறது.

* சிலருக்கு உஷ்ண உடம்பாக இருக்கும். இவர்கள் தினமும் இரவு உணவுக்குப்பிறகு ஒரு பச்சை வாழைப்பழத்தை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி பெறும். சூட்டினால் ஏற்படும் கட்டிகளும் நீங்கும். மூட்டுவலி, வாதநோய் இருப்பவர்கள் பச்சை வாழைப்பழத்தை தவிர்க்கலாம்.

* தினமும் பூவன்பழம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். உடல் சோர்வு, தளர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.

* மஞ்சள் காமாலை நோய் நீங்கிய பின்னும் கண்களில் வரும் மஞ்சளை நீக்கும் வல்லமை படைத்தது ரஸ்தாளி பழம்.

* தினமும் ஒரு பேயன் வாழைப்பழத்துடன் சிறிது தேன் கலந்து சாப்பிட அம்மை நோய் வந்தபின் உள்ள கொப்புளங்களின் சிவப்பு மாறும். வெளிப்பூச்சாகவும் இதை உபயோகிக்கலாம்.

* ஒரு பேயன் வாழைப்பழத்துடன் சிறு கொத்து வேப்பந்தளிர், கொஞ்சம் இளநீர், கஸ்தூரி மஞ்சள் பவுடர் இவற்றை சேர்த்து அரைத்து அம்மைத் தழும்புகளின் மீது பற்றுப் போட்டு வந்தால், சுவடே இல்லாமல் வடுக்கள் மறையும்.

* செவ்வாழையில் விட்டமின் ‘ஏ’ சத்து நிறைய உள்ளது. இதைத்தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டுவர, நோய் எதிர்ப்பு சக்தி கூடும். சொரி, சிரங்கு போன்றவற்றை குணப்படுத்தி சருமத்தை பளபளப்பாக்கும். நரம்பு தளர்ச்சியினால் ஏற்படும் தளர்வையும் நீக்குவதோடு, எலும்பை பலப்படுத்தி, பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவைத் தடுக்கும் வல்லமையும் செவ்வாழைக்கு உண்டு.

* நன்றாகப் பழுத்த அரை நேந்திரம் பழத்தை தினமும் இரவு சாப்பிட்டுவர இதயம் வலிமையாகும். மூச்சு சீராகும்.

* சிலருக்கு வாழைப்பழம் சாப்பிட்டால், சளி உண்டாவதாக நினைப்பர். அதற்கு வாழைப்பழம் சாப்பிட்டபின் ஒரு டம்ளர் சூடான தண்ணீரை பருகலாம்.

* வெயிலின் கடுமையால் சருமத்தில் ஏற்படும் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு தருகிறது வாழைப்பழ பேஸ்ட்.

* ஒரு வாழைப்பழத்துடன் (பூவன்) சிறிதளவு வெள்ளரி விதை பவுடர் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவினால், வெயிலாலும், தூசியாலும் சருமத்தின் கருமை நீங்கும். பாலுக்குப் பதில் தயிர் சேர்க்க முகம் குளிர்ச்சி பெறும்.

- மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்

Related Stories: