சாபத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது!

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

“இதுதான் நான் எதிர்க்கக்கூடிய ஒரே வழி. இந்தப் போரில் நான் போராடுவதை ஜனநாயகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு சாதாரண நபர் சட்டரீதியாகப் போராட முடியும் என்று நான் ஒவ்வொரு முறையும் போராடினேன். என்னால் முடிந்ததைச் செய்தேன். இப்போது என்ன செய்கிறேன்... என் தலைமுடியை வெட்டுகிறேன். இதைச் செய்வதற்கு யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை”  என்று ஒரு பெண் தனது தலைமுடியை வெட்டும் வீடியோ சமீபத்தில் வைரலானது. யார் இவர், எதற்காக இந்த முடிவு?

கேரள மாநிலம்  எர்ணாகுளம், வடக்கு பரவூர் தாலுகாவில் உள்ள வழிக்குலங்காரா (Vazhikulangara) பகுதியில் அமைந்திருக்கிறது ‘சாந்திவனம்’ என்கிற புனித தோப்பு. 200 ஆண்டுகளாகப் பசுமை நிறைந்திருக்கும், இரண்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த காடு ரவீந்திரன் என்பவரால் பராமரிக்கப்பட்டு வந்தது. இவர் மறைவுக்குப் பின், மகள் மீனா மேனன் தனது தந்தையின் முழுப்பொறுப்பையும் கையில் எடுத்தார்.

கேரள மின்சார வாரியம், இந்த பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்வதற்காக, மீனாவின் சாந்திவனத்தின் வழியே 110 KV  எடுத்துச் செல்ல இங்குள்ள மரங்களை வெட்டுவதற்குத் திட்டமிட்டது. பல் வேறு வகையான தாவரங்கள், விலங்கினங்கள் கொண்டிருக்கும் இந்த புனித தோப்பை பாதுகாக்கக் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒற்றை நபராகப் போராடி வருகிறார் மீனா.

“பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை நாம் குழந்தைகளிடம் படிக்க வைக்கிறோம். ஆனால் எஞ்சியிருப்பதை அழிப்பதிலும் நாம்தான்முன் நிற்கிறோம்” என்று கூறுகிறார் மீனா.மூன்று பெரிய புனித தோப்புகள் - குளங்கள், ஒரு  கோயில் கொண்டுள்ள இந்த சாந்தி வனத்தினை பாரம்பரியமாக இவர்கள் குடும்பம் பாதுகாத்து வருகிறது.

தனித்துவமான வாழ்விடமாக இருக்கும் இந்த பகுதி, கேரள மாநிலத்தின் தாழ் நில கடலோர பசுமையான சுற்றுச்சூழல் அமைப்பின் எச்சங்களில் ஒன்றாக இருப்பதினால் வலுவான பாதுகாப்பு உத்தி தேவைப்படுகிறது. ஏராளமான மருத்துவ தாவரங்களுக்கும், பல்வேறு விலங்குகள், பறவைகள்,  ஊர்வனங்கள் போன்றவற்றின் புகலிடமாக இந்த வனம் திகழ்ந்து வருகிறது.

பறவையியலாளர்கள், பறவைக் கண்காணிப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இங்குள்ள பறவைகளின் பன்முகத்தன்மை மாறுபடுகிறது. சில அரிதான Rufous Woodpecker, Eurasian Hoopoe, Grey-bellied Cuckoo, Scaly-breasted Munia, Indian Pitta, Orange-headed Thrush போன்ற பறவைகள் சாந்திவனத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அது மட்டும் இல்லாமல் கேரள வன ஆராய்ச்சி நிறுவனம் அறிய செடிகளின் விதைகளை சாந்திவனத்திலிருந்து சேகரித்து வருகிறது.

2013 ஆம் ஆண்டு கேரள மாநில மின்சார வாரியம் (KSEB), சாந்திவனம் வழியே 1102kv மின்சார விநியோக வழியை முன்மொழிந்தது. இதற்கு எதிராக மீனா போராடிய போதிலும், KSEB அவர்களுக்கு ஆதரவாக ஒரு உத்தரவைப் பெற்றது. இதனையடுத்து மீனாவிற்கு இடையூறு கொடுத்ததோடு அங்குள்ள மரங்களை வெட்டவும் ஆரம்பித்தனர். அதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல, அன்று அவருக்கு சாதகமாக அமைந்திருந்தாலும், மூன்றே ஆண்டுகளில் வழக்கு KSEBக்கு ஆதரவாக மாறியது.

“இந்த உத்தரவினால், உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கேன். மேலும் முதலமைச்சர் மற்றும் மாநில ஹரிதா கேரள மிஷனிலும் மனுக்களை தாக்கல் செய்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை” என்று கூறுகிறார்.இதனையடுத்து இந்த ஆண்டு (2019) KSEB மின் கம்பங்கள் அமைக்கும் வேலைகளை ஆரம்பித்தனர். “சட்டத்தின் துணையை நாடி இருந்தும், KSEB போலி ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததால், எனது மனு நிராகரிக்கப்பட்டது.

அதற்கான பதிலளிப்பதற்கு முன்பே தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 6 ஆம் தேதி, KSEB - போலீஸ் பாதுகாப்போடு வந்து இங்கு வேலைகளை ஆரம்பித்தனர்” என்று மீனா குற்றம் சாட்டுகிறார்.KSEB இந்த குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது என்று கூறியுள்ளது. The Cherai-Mannam Line Project பொறுப்பாளரான துணை தலைமை பொறியாளர் ஜார்ஜ் கூறுகையில், “இப்பகுதியில் நிலவும் கடுமையான மின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இந்த திட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது” என்கிறார்.

இதற்கிடையில் மீனாவிற்கு ஆதரவாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தங்களின் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர், “விலங்குகள், பறவைகளுக்காக கடலோர பகுதியில் ஒரு காட்டை வளர்த்து வருகிறார். இதனால் அழிந்துபோன உயிரினங்களுக்கு ஒரு வீட்டை வழங்கியுள்ளார். இதற்கு சமூகம் அவரை மதிக்க வேண்டும். நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. அது சுற்றுப்புறச் சூழலை பாதிக்கும் போது கண்டிப்பாக எங்களின் எதிர்ப்பினை முன்வைப்போம்’’ என்கின்றனர்.

சாந்திவனத்தை பாதுகாக்க  பல்வேறு போராட்டங்களைக் கையிலெடுத்த மீனாவிற்கு அரசிடமிருந்தும், துறை சம்பந்தமாகவும் எந்த ஒரு பதிலும் இல்லை. இப்படியிருக்க, மக்கள் பற்றியோ, இயற்கை பற்றியோ எந்த ஒரு கவலையும் இல்லாமல் தான் நினைத்ததை நிறைவேற்றுவதற்கே அரசும், அதிகாரிகளும் இருக்கின்றனர் என்பதை நிரூபணம் ஆக்கும் வகையில் சமீபத்தில் சாந்தி வனத்தில் வேலைகள் அதிகாரப்பூர்வமாக

ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சாந்திவனத்தில் உள்ள ஒவ்வொரு மரங்களின் கிளைகளை வெட்டும் அதே நேரத்தில் தனது தலையில் உள்ள முடிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக  வெட்டி எதிர்ப்பை பதிவு செய்த மீனா, வெட்டப்பட்ட முடியினை கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும், மின்சார அமைச்சர் எம்.எம். மோனிக்கும் அர்ப்பணிப்பதாக அறிவித்தார். “நான் உங்களின் பதிலுக்காக நீண்ட காலமாகக் காத்திருக்கிறேன்.

 பல்லுயிரியலைக் காப்பாற்ற முயற்சிக்கும் ஒருவருக்கும் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். இது மக்கள் எல்லோருக்குமான பாடம். 200 வயதான இந்த புனித தோப்புகளுக்குக் கடந்த ஐம்பது ஆண்டுகளாக, என்னாலும் என் தந்தையாலும் எந்த ஒரு தீங்கும் இல்லை. ஆனால், இப்போது நடக்கிறது. இந்தக் காடுகளில் உள்ள ஒவ்வொரு சிறிய உயிரினத்தின் சாபத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது” என்று

மீனா ஆவேசமாக கூறினார்.

அன்னம் அரசு

Related Stories: