சில்லி பாயின்ட்...

* இந்தியாவில் இருந்து விமானங்கள் ஆஸ்திரேலியா வர மே 15ம் தேதி வரை அந்நாடு தடை விதித்திருந்தது. அதனால் ஐபிஎல் ரத்தானாலும் ஆஸி வீரர்கள் நாடு திரும்ப முடியவில்லை. அதனால் மாலத்தீவில் தங்க வைக்கப்பட்ட ஆஸி  வீரர்கள், மே 15ம் தேதிக்கு பிறகு அங்கிருந்து சொந்த நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.கொரோனா தொற்றில் இருந்து மீண்ட சிஎஸ்கே பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸியும் நாடு திரும்பியுள்ளார். இப்படி நாடு திரும்பியுள்ள ஹஸ்ஸி உள்ளிட்ட  ஆஸ்திரேலியர்கள் 14 நாட்கள் குவாரன்டைன் செய்யப்பட்டுள்ளனர். அதற்காக அங்கு பல்வேறு நட்சத்திர விடுதிகளில் தங்கியுள்ளதற்கான செலவை பிசிசிஐ ஏற்றுள்ளது.

* கொலை வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

* சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட ஏபி டி வில்லியர்ஸ், இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் தென் ஆப்ரிக்கா அணிக்காக மீண்டும் களமிறங்கப் போவதில்லை என முடிவு  செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக முன்னாள் சாம்பியன் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா (சுவிஸ்) அறிவித்துள்ளார்.

* 2011 ஐசிசி உலக கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்க அணி கால் இறுதியில் நியூசிலாந்திடம் 49 ரன் வித்தியாசத்தில் தோற்று வெளியேறியது. அந்த போட்டியில் ‘டி வில்லியர்ஸ் ரன் அவுட்டானதற்கு நான் தான் காரணம் என ஆத்திரம்  அடைந்த சிலர் எனக்கும் எனது மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். அது மிகுந்த மன வேதனையை அளித்தது’ என்று முன்னாள் கேப்டன் டு பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

* ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்லும் இந்திய அணி வீரர்கள் அங்கு கொரோனா தடூப்பூசி 2வது டோஸ் போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: