முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருநாள் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: முதல்வரின் நிவாரண நிதிக்கு தமிழக ஐஏஎஸ் கேடரில் பணியாற்றுவோரின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்துகொள்ள  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகம் கோவிட்-19ல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் கேடரில்  பணியாற்றுவோர் கொரோனவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவிடும் வகையில் ஒரு நாள் சம்பளத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் விருப்பம் தெரிவித்தும் கடிதம் வரப்பெற்றிருந்தது. இதையடுத்து தமிழக அரசும் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்யும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த நிதியை மே அல்லது  ஜூன் மாதத்தில் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்ள தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் மருத்துவ உதவிக்காக அதிகாரிகள் நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீதிபதிகளுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவுவதற்காக உயர் நீதிமன்றம் தனி அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது.கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அனைத்து தரப்பு மக்களையும் விட்டு வைக்கவில்லை. தமிழகத்தில் தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள்  கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நெல்லை சார்பு நீதிமன்ற நீதிபதி கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

இதையடுத்து, நீதிபதிகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக தனி அதிகாரிகளை நியமனம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.அதன்படி மருத்துவ சிகிச்சை தொடர்பான உதவிகளை பெற உயர் நீதிமன்ற பதிவாளர்  (நிர்வாகம்) வி.தேவநாதன், தலைமை நீதிபதியின் தனி செயலாளர் வி.ஜெய்சங்கர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். சார்பு நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த உத்தரவை அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிளும் சம்பந்தப்பட்ட மாவட்ட சார்பு நீதிபதிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று பதிவாளர் ஜெனரல் தனபால் அறிவித்துள்ளார்.

Related Stories: