கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து திருடி விற்ற ஊழியர் உள்பட 5 பேர் கைது

சென்னை: திருவல்லிக்கேணியில் உள்ள தாயிரா பார்மஸி என்ற மருந்துக்கடையில் வைத்து ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து,  தனிப்படையினர் அந்த கடையில் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது கணக்கில் வராத ரெம்டெசிவிர் மருந்து 5 குப்பி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து தனிப்படையினர் மருந்துக்கடை உரிமையாளர் புரசைவாக்கத்தைச் சேர்ந்த முகமது இர்பானை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் திருமங்கலத்தைச் சேர்ந்த  பாலகிருஷ்ணனை (23) கைது செய்தனர்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரில் டெக்னீசியனாக பணிபுரியும் இவர், அங்குள்ள விடுதியில் தங்கிரெம்டெசிவிர் மருந்தை திருடி மருந்துக் கடையில் கொடுத்துள்ளார்.   இதில் தொடர்புடைய இவரது நண்பர்களான லெதர் ஷுக்களை ஆன்லைனில் விற்கும் பழைய வண்ணாரப்பேட்டை முகமது கலீல் (35), தனியார் மொபைல் நெட்வொர்க்கில் சேல்ஸ்மேனாக பணிபுரியும் திருவொற்றியூர் முகமது ஜாகித் (23),  ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள தனியார் டிராவல்சில் வேலை செய்யும் திருவல்லிக்கேணி ஆரிப் உசேன்  (32) என மொத்தம் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 இந்த வழக்கில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆபரேசன் தியேட்டரில்  பணிபுரியும் மணியை தேடி வருகின்றனர். ஸ்ரீதிருத்தணி கன்னிகாபுரம் சாலையில் அதிக விலைக்கு ரெம்டெசிவிர் மருந்தை விற்ற அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரபாபு (50) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து, 3 குப்பி மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories: