ஹவுஸ் புல்லாக இயக்கப்படும் ரயில்கள் நோய் தொற்றுக்கு ஆளாகும் பயணிகள்

சென்னை:  தமிழகத்தில் 2வது அலை கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது முழு ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொது போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.  அதிலும் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியிலும் பயணம் செய்வதற்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ-பதிவு இல்லாத வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் மக்களின் நடமாட்டம் வெகுவாக  குறைந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து காணப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.

ஆனால், பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டாலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ரயில் சேவை என்பது சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு தினமும்  3க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  இதில் பயணம் செய்பவர்களுக்கு இ-பதிவு மற்றும் உடல் ெவப்ப நிலை மட்டுமே சோதிக்கப்படுகிறது. கொரோனா நெகடிவ் சான்றிதழ் எதுவும் கேட்பதில்லை. தென்மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் ஒன்று  என்ற அளவில் குறைக்கப்பட்டாலும் பயணிகள் கூட்டமும் குறைவாகவே காணப்படுகிறது.

குறிப்பாக, கடந்த சில நாட்களாக இந்த ரயில்களில் முழு அளவில் பயணிகள் பயணிக்க தொடங்கியுள்ளனர். டிக்கெட் முன்பதிவை பார்த்தால் ஹவுஸ்புல்லாகவே இயக்கப்படுவதாக தெரிகிறது. வெறும் இ-பதிவு, உடல் வெப்பநிலையை மட்டும் வைத்து ரயில்களில் மொத்தமாக பயணிப்பதால் ஒரு பெட்டியில் ஏதாவது ஒரு கொரோனா நோயாளி இருந்தால் அந்த நபர் மூலம் அந்த பெட்டியில் உள்ள பலருக்கு கொரோனா பரவும்  அபாயம் இருந்து வருகிறது.  ரயில்களில் பயணிக்க முகக்கவசம் கட்டாயம் என்றாலும் நீண்ட நேர பயணம் என்பதால் பலர் முழுவதுமாக அணிவதில்லை.

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான சானிடைசர், கிருமி நாசினி மூலம் பெட்டிகளை சுத்தம் செய்வது  போன்ற எதுவும் செய்ததாகவும் தெரியவில்லை. அறிகுறி இல்லாமல் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா அறிகுறி இருப்பவர்கள் பலர் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்கின்றனர். இவர்களால் ரயில் பயணங்கள் ஆபத்தானவையாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்னர். எனவே, ரயில்கள் மூலம் கொரோனா பரவலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ரயில் சேவைகளை நிறுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>