அதிமுக ஆட்சியில் 2019ம் ஆண்டை விட 2020ல் கூடுதலாக 49,673 பேர் மரணம்: அரசு மருத்துவமனைகளில் இறப்பு 12,000 அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் 2019ம் ஆண்டை விட 2020ல் கொரோனாவால் 49,673  மரணங்கள் அதிகமாக பதிவாகியுள்ளது. இதில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 12 ஆயிரம் இறப்புகள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி  உள்ளது. 2020ல் மட்டும் தமிழகத்தில் 6.86 லட்சம் இறப்புகள் பதிவாகி உள்ளது.  தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கொரோனா தொற்று முதல் அலை தீவிரமாக பரவியது. இதில் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே இருந்தது. இதை கட்டுப்படுத்த பொதுமுடக்கம்  அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் வெளியே வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

 இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா உயிரிழப்பு அதிகம் பதிவாகியதாகவும், அதிமுக  அரசு உயிரிழப்பை குறைத்து கணக்கு காட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மயானங்களில் பதிவான கொரோனா தொற்று மரணங்கள் தொடர்பாக “தினகரன் நாளிதழ்” கள ஆய்வு நடத்தியது. இதில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில்  சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர்களில் 500க்கு மேற்பட்டவர்களின் விவரங்கள் மறைக்கப்பட்டு இருப்பதாக கடந்த ஆண்டு ஜூன் 3ம்தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதனைத்தொடர்ந்து  சென்னையில் கொரோனா தொற்று மரணங்கள் விடுபட்டது தொடர்பாக ஆய்வு நடத்த சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இந்த குழு, சென்னையில் மார்ச் முதல் ஜுன் 10ம்தேதி வரை கொரோனா தொற்று மரணங்கள் மற்றும் அதற்கான காரணம் குறித்து களஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை அளித்தது. இந்த அறிக்கையில், 444  கொரோனா தொற்று மரணங்கள் விடுபட்டு இருப்பதாக கூறப்பட்டது. இந்த அறிக்கையின் படி, விடுபட்ட 444 மரணங்களை கொரோனா மரணங்களின் பட்டியலில் சேர்ப்பதாக தமிழக அரசு அறிவித்தது. இதன்பிறகு இந்த மரணங்கள் அனைத்தும்  கொரோனா தொற்றால் மரணம் அடைந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் 2019ம் ஆண்டை விட 2020ல் 49 ஆயிரம் மரணங்கள் அதிகமாக பதிவாகி உள்ளது தெரியவந்துள்ளது. இதில் குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் மட்டும் 12 ஆயிரம் இறப்புகள் அதிகம்  பதிவாகி உள்ளது. தமிழக அரசின் பிறப்பு இறப்பு பதிவேட்டின் படி, தமிழகத்தில் 2020ல் 6 லட்சத்து 86 ஆயிரத்து 740 மரணங்கள் பதிவாகி உள்ளது. இதில் ஆண்கள் 4 லட்சத்து 8 ஆயிரத்து 217, பெண்கள் 2 லட்சத்து 78, 451, திருநங்கைகள் 72  பேர் ஆகும்.  2019ம் ஆண்டு பதிவேட்டின் படி, தமிழகத்தில் மொத்தம் 6 லட்சத்து 37 ஆயிரத்து 67 மரணங்கள் பதிவாகி உள்ளது. இதில் ஆண்கள் 3 லட்சத்து 79 ஆயிரத்து 152 பேர், பெண்கள் 2லட்சத்து 57 ஆயிரத்து 824 மரணங்கள் பதிவாகி உள்ளது.  இதன்படி, பார்த்தால் 2019ம் ஆண்டை விட 2020ல் 49 ஆயிரத்து 673 மரணங்கள் அதிகம் பதிவாகி உள்ளது. இதில் அரசு மருத்துவமனைகளில் தான் அதிக மரணங்கள் பதிவாகி உள்ளது தெரியவந்துள்ளது.

2020ம் ஆண்டு அரசு மருத்துவமனைகளில் 88 ஆயிரத்து 609 மரணங்களும், 2019ம் ஆண்டு அரசு மருத்துவமனைகளில் 75 ஆயிரத்து 771 மரணங்கள் பதிவாகி உள்ளது. இதன்படி, 2020ம் ஆண்டு 12 ஆயிரத்து 838 மரணங்கள் அதிகம் பதிவாகி  உள்ளது. இதற்கு அடுத்தபடியாக மாநகராட்சிகளில் 2020ம் ஆண்டு 1 லட்சத்து 38 ஆயிரத்து 748 மரணங்களும், 2019ம் ஆண்டு 1 லட்சத்து 30 ஆயிரத்து 503 மரணங்களும் பதிவாகி உள்ளது. இதன்படி 2020ம் ஆண்டில் 8245 மரணங்கள்  கூடுதலாக பதிவாகி உள்ளது.

நகராட்சிகளில் 2020ம் ஆண்டு 63 ஆயிரத்து 230 மரணங்களும், 2019ம் ஆண்டு 58ஆயிரத்து 430 மரணங்களும் பதிவாகி உள்ளது. இதன்படி, 4800 மரணங்கள் அதிகம் பதிவாகி உள்ளது. பேரூராட்சிகளில் 2020ம் ஆண்டு 65 ஆயிரத்து 645  மரணங்களும், 2019ம் ஆண்டு 61 ஆயிரத்து 3 மரணங்களும் பதிவாகி உள்ளது. இதன்படி, 4642 மரணங்கள் அதிகம் பதிவாகி உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2020ம் ஆண்டு 527 மரணங்களும், 2019ம் ஆண்டு 365 மரணங்களும்  பதிவாகி உள்ளது. இதன்படி 162 மரணங்கள் அதிகம் பதிவாகி உள்ளது.

கொரோனா மரணங்கள் 12,122தான்: அதிமுக அரசு

தமிழக அரசு தினமும் கொரோனா பாதிப்பு பற்றிய புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது. கடந்த 2019ம் டிசம்பர் 31ம் தேதி அதிமுக அரசு வெளியிட்ட புள்ளிவிவரப்படி, கொரோனா பலி எண்ணிக்கை 12,122.

5 மாவட்டங்களில் அதிகம்

2019 மற்றும் 2020ம் ஆண்டு மரணங்களை ஒப்பிடுகையில் சென்னையில் 5045, காஞ்சிபுரத்தில் 4,369, மதுரையில் 3,018, கடலூர் 2,955, சேலம் 2877 மரணங்கள் கூடுதலாக பதிவாகி உள்ளது.

Related Stories:

>