திண்டிவனம் தனியார் மருத்துவமனையில் வாங்கிய போலி ரெம்டெசிவர் மருந்தால் டாக்டர் உயிரிழப்பு?: சுகாதாரத்துறை அதிரடி சோதனை..ரூ.1லட்சம் அபராதம் விதிப்பு

திண்டிவனம்: திண்டிவனம் தனியார் மருத்துவமனையில் போலி ரெம்டெசிவர் ஊசி மருந்து வாங்கி பயன்படுத்திய டாக்டர் உயிரிழந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதார துறையினர் சோதனை  செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே மருத்துவமனை நடத்தி வந்த மருத்துவர் ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொரோனாவால் சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். உயிரிழந்த  மருத்துவருக்கு திண்டிவனத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் இருந்து மருந்து வாங்கி சென்றதாக கூறப்படுகிறது.

அந்த மருந்தை செலுத்தியதால்தான் மருத்துவர் உயிரிழந்ததாக அவரது தம்பி மக்கள் நல்வாழ்வு துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் புகார் அளித்துள்ளார்.  இந்நிலையில் நேற்று திண்டிவனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், மாநில பொது சுகாதார இணை இயக்குநர் செல்வவிநாயகம், மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் சிவபாலன், பொது சுகாதார நோய் தடுப்பு பிரிவு குருநாதன், மருந்து  கட்டுப்பாட்டு காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது பதிவேட்டில் குறிப்பிட்டதை விட அதிகமாக ரெம்டெசிவர் மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து அந்த  மருத்துவமனையில் செயல்பட்டுவந்த கொரோனா சிகிச்சை பிரிவை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

 பின்னர் சுகாதாரத் துறையினர்  கூறுகையில்,  சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் சோதனை செய்தபோது,  கொரோனா  நோயாளிகளுக்கு செலுத்தவேண்டிய ரெம்டெசிவர் மருந்து பதிவேட்டில்  காண்பித்ததை விட, இருப்பு அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 12  குப்பிகள் மட்டும் இருக்க வேண்டிய நிலையில் 18  குப்பிகள் இருந்தது.  கணக்கில் வராத 6  குப்பிகளும் போலி என கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து  நடத்திய விசாரணையில், அவற்றை புதுச்சேரியில் இருந்து வாங்கி திண்டிவனத்தில் உள்ள மருத்துவமனையில் விற்பனை செய்தது  கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விதிமுறைகளை மீறி முறைகேடாக செயல்பட்ட  மருத்துவமனைக்கு ஒரு  லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இது சம்பந்தமாக அரசு  மருத்துவர் ஒருவர் உட்பட 3 பேரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  இவ்விவகாரத்தில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில்  பணிபுரியும்  மருத்துவர் ஒருவரும் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.  இதனிடையே போலி ரெம்டெசிவர் மருந்து செலுத்தியதால்தான் மருத்துவர் இறந்தாரா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>