தமிழகத்திற்கு ஆக்சிஜன் கொண்டு வர காலி ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் விமானத்தில் ராஞ்சிக்கு பறந்தது: கொரோனா தடுக்க அரசு அதிரடி

அவனியாபுரம்:  நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனால், நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்கும் வகையில் எங்கெல்லாம்  ஆக்சிஜன் உற்பத்தியாகிறதோ அங்கிருந்து கொண்டு வர தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க திருச்சி பெல் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 காலி ஆக்சிஜன் டேங்கர்கள், திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான  நிலையம் வந்தடைந்தன.  

பின்னர் அவை இந்திய விமானப்படைக்கு சொந்தமான ராணுவ விமானம் மூலம் மதுரையில் இருந்து நேற்று பகல் 12 மணியளவில் ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இந்த  டேங்கர் லாரிகளில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு திரும்பவும் கொண்டு வரப்படுகிறது. முன்னதாக கடந்த 14ம் தேதி இரவு 10  மணிக்கு  2 டேங்கர் லாரிகள், விமானப்படை விமானம் மூலம் ஒடிசா ரூர்கேலா நகருக்கு கொண்டு செல்லப்பட்டது  குறிப்பிடத்தக்கது. ராஞ்சியில் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட லாரிகள் பின்னர் ரயில்கள் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

Related Stories:

>