மேற்கு வங்கத்தில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட 4 திரிணாமுல் தலைவர்களுக்கும் திடீர் மூச்சுத்திணறல், காய்ச்சல்: மருத்துவமனையில் அனுமதி

கொல்கத்தா:  நாரதா வழக்கில் கைது செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் 4 பேருக்கும் திடீர் மூச்சுத்திணறல், காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2014ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் சிலர் போலி நிதி நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படுவதற்காக லஞ்சம் பெற்றதை நாரதா என்ற சேனல்  அம்பலப்படுத்தியது. 2017ம் ஆண்டு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  

நாரதா வழக்கில் தொடர்புடைய திரிணாமுல் காங்கிரசின் பிர்காத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, மதன் மித்ரா ஆகிய மூன்று பேரும் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்திலில் பெற்றி பெற்றுள்ளனர். இதில் பிர்காத் ம்றறும் சுப்ரதா அமைச்சராக  பொறுப்பேற்றுள்ளனர். சோவன் சட்டர்ஜி கட்சியில் இருந்து விலகி இருந்து வருகின்றார். இந்த வழக்கில் இவர்கள் மீதான நடவடிக்கைக்கு ஆளுநர் ஜெகதீப் தன்கர் அனுமதி அளித்தார்.  இதனை தொடர்ந்து விசாரணைக்காக சென்ற அமைச்சர்கள் பிர்கர் ஹக்கீம், சுப்ரதா முகர்ஜி, எம்எல்ஏ மதன் மித்ரா, மாஜி தலைவர் சோவன் சட்டர்ஜி ஆகியோரை சிபிஐ நேற்று முன்தினம் கைது செய்தது.

இதனால் மாநில முதல்வர் மம்தா  சிபிஐ அலுலகத்திற்கு வர, பல பகுதிகளில் திரிணாமுல் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, சிபிஐ நீதிமன்றத்தில் 4 தலைவர்களும் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆனால், உடனடியாக சிபிஐ கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, ஜாமீன் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இதனால் இரவு முழுவதும் 4 திரிணாமுல் தலைவர்களும் சிபிஐ பிடியில் இருந்த நிலையில், நேற்று  அதிகாலையில் மதன் மித்ரா, சோவன் சட்டர்ஜி மற்றும் அமைச்சர் சுப்ரதா முகர்ஜிக்கு அடுத்தடுத்து மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  அதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் பிர்கர் ஹக்கீமுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே, 4 திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் ஜாமீன் ரத்து எதிர்த்து தொடர்ந்த வழக்கு கொல்கத்தா உயர்  நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

சுவேந்து அதிகாரி ஏன் கைதாகவில்லை?

சமீபத்தில் திரிணாமுலின் முக்கிய தலைவரான சுவேந்து அதிகாரி பாஜவுக்கு தாவினார். இவரும் நாரதா வழக்கில் சம்மந்தப்பட்டவர். இதே போல, 2017ல் பாஜவில் சேர்ந்த முகுல் ராயும் கைது செய்யப்படவில்லை. பாஜவில் சேர்ந்ததால்தான்  இவர்கள் கைது செய்யப்படவில்லை என திரிணாமுல் குற்றம்சாட்டுகிறது. இது குறித்து சிபிஐ அளித்த பதிலில், ‘‘எம்பி என்பதால் சுவேந்துவிடம் விசாரிக்க மக்களவை சபாநாயகரின் அனுமதி கேட்டுள்ளோம். இன்னும் கிடைக்கவில்லை’’  என்றனர். ஆனால் முகுல் ராய் பெயர் இடம் பெறாதது குறித்து சிபிஐ எந்த பதிலும் கூறவில்லை.

Related Stories:

>