கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதேபோல், கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, ரெம்டெசிவிர் மருந்துகள் தனியார் மருத்துவமனைகளிலே இன்று முதல் கிடைக்கும்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் காலை 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரால் அறிவுறுத்தப்பட்ட நாட்கள் வரை வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் விதிகளை மீறி வெளியே சென்றால் முதல் முறை ரூ.2000 அபராதரம் விதிக்கப்படும், இரண்டாவது முறையும் விதிகளை மீறினால் அருகில் உள்ள கொரோனா மையத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள். தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வெளியே செல்கிறார்களா என்பது தொடர்பான புகார்களை அருகில் இருப்பவர்கள் 044-25384520 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: