ஆவடி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 50 ஆக்சிஜன் படுக்கை வசதி

ஆவடி: ஆவடி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஐம்பது ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் நாசர் கூறினார். ஆவடி அரசு மருத்துவமனைக்கு ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தினமும் சிகிச்சை பெற வருகின்றனர். இந்த மருத்துவமனையில் அதிமுக ஆட்சியின்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க எந்த வசதியும் ஏற்படுத்தபடாமல் இருந்தது. இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு மருத்துவமனைகளில் கொரோனா  வார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு.நாசர் ஆகியோர் ஆவடி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.

அப்போது அமைச்சர் நாசர், “ஆவடி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஐம்பது ஆக்சிஜன் படுக்கை வசதி அமைக்கவேண்டும்’’ என்று வலியுறுத்தினார். இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கொரோனா படுக்கை வசதி தீவிரமாக நடைபெற்று வந்தது. அத்துடன் அமைச்சர் நாசர், இரண்டுமுறை மருத்துவமனைக்கு வந்து பணிகளை தீவிரப்படுத்தினார். இதையடுத்து முதல்கட்டமாக 10 ஆக்சிஜன் படுக்கைகள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில், நேற்று காலை அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆகியோர்   கொரோனா கவச உடைந்து மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர், நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மருத்துவ சிகிச்சை எவ்வாறு அளிக்கப்படுகிறது என்று விசாரித்தார். இதன்பின்னர் அமைச்சர் நாசர் கூறியதாவது; ஆவடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு ஆக்சிஜன் வசதியுடன் 10 படுக்கை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள 10 நோயாளிகளுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வரும் புதன்கிழமை முதல் கூடுதலாக 40 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். இங்கு மருத்துவர்கள், நர்ஸ்கள், முன்கள பணியாயளர்கள் ஆகியோர் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். ஆவடி அரசுமருத்துவமனையில் மேலும் பல வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும். பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும். திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதலான வசதிகள் செய்து கொடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: