கொலை வழக்கில் போலீசார் தேடிவரும் நிலையில் ஐயா... கோர்ட்டில் சரணடைந்து விடுகிறேன்: வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிய மல்யுத்த வீரர்

புதுடெல்லி: கொலை வழக்கில் போலீசார் தேடிவரும் நிலையில், நீதிமன்றத்தில் சரணடைந்து விடுவதாக போலீசாருக்கு வாட்ஸ்அப்பில்  மல்யுத்த வீரர் தகவல் அனுப்பி உள்ளார். அதனால், அவர் விரைவில் நீதிமன்றத்தில் சரணடைய வாய்ப்புள்ளது. இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார், அவரது நண்பர்கள் ஆகியோர் முன்னாள்  மல்யுத்த வீரர் சாகர் தான்கட் (23) என்பவரை, டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் கடுமையாக தாக்கியுள்ளனர்.  இதன்பின்னர் சுஷில் குமாரும், அவரது நண்பர்களும் தப்பிவிட்டனர்.  பலத்த காயங்களுடன் கிடந்த சாகர் தான்கட், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக டெல்லி போலீசார் கொலை வழக்குப்பதிந்து சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 10 பேரை தேடி வந்தனர்.

போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, சுஷில் குமார் ஹரித்துவார் சென்று, அங்கிருந்து ரிஷிகேஷ் சென்றுள்ளார். இதனையடுத்து, சுஷில் குமார் நாட்டை விட்டு தப்பி செல்ல முடியாத வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும், அவர் மீது டெல்லி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். மேலும், அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுஷில் குமார் குறித்து துப்பு கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்றும் டெல்லி போலீசார் அறிவித்தனர். இந்நிலையில், கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான சுஷில் குமார், டெல்லியில் உள்ள எந்தவொரு நீதிமன்றத்திலும் வரும் ஓரிரு நாட்களில் சரணடைய வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சுஷில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு அவர்களை தேடும்பணி தீவிரமாக நடக்கிறது. இதற்கிடையே தலைமறைவாக உள்ள சுஷில் குமார், அவரது வழக்கறிஞர் மூலம் மாடல் டவுன் காவல் நிலைய போலீஸ்காரருக்கு வாட்ஸ்அப்பில் ஒரு தகவலை அனுப்பி உள்ளார். அதில், அவரது குடும்பத்தை சேர்ந்த மாமியார், மனைவி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களிடையே ேபாலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனால், அவர்களுக்கு தேவையற்ற மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால், அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க, விரைவில் நீதிமன்றத்தில் சரணடைய உள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், அவரை கைது செய்ய டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு நடத்தி வருகின்றனர்.

Related Stories: