டெல்லியை உலுக்கி எடுக்கும் கொரோனா 2வது அலை: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதியுதவி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கணவர் இறந்தால், மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்படும், மனைவி இறந்தால் அது கணவருக்கு வழங்கப்படும். திருமணமாகாத ஒருவர் இறந்தால்,பெற்றோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இரண்டாம் அலை டெல்லியை உலுக்கி எடுத்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லி மிக மோசமான நிலைமையில் இருந்தது.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் அவதிபட்ட அதே சமயத்தில், உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைக்க இடமில்லாமல் மயானங்களில் சடலங்கள் வரிசையில் வைக்கப்பட்டிருந்த சம்பவங்கள் பதைபதைக்க வைத்தது. இதே நிலை நீடித்தால் டெல்லி இருக்காது என சுகாதாரத்துறை அச்சம் தெரிவித்தது. இதையடுத்து, மாநில அரசுடன் இணைந்து செயல்பட்ட மத்திய அரசு டெல்லியில் நிலவிய ஆக்சிஜன் பிரச்னையை சரி செய்தது. அதே சமயம், ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டதால் பாதிப்பு 20 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக குறைந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,500ஆக பதிவாகியுள்ளது. உயிரிழப்புகளும் 340 ஆக குறைந்துள்ளது. இந்த நிலையில், டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுமென அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் கொரோனா தொற்றால் இறந்தால் மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்றும் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார். டெல்லியில் இதுவரை கொரோனாவால் 22,111 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: