முதலமைச்சர் கொரோனா நிதிக்கு அதிமுக ரூ.1 கோடி நிதி!: தலைமை செயலாளரிடம் நேரில் வழங்கினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!

சென்னை: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட 1 கோடி ரூபாய் நிதிக்கான காசோலை தலைமை செயலாளர் வெ.இறையன்பு-விடம் நேரில் வழங்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் இறையன்பு-வை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினருமான ஜெயக்குமார் காசோலையை வழங்கினார். பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஜெயக்குமார், முதலமைச்சர் கேட்டுக் கொண்டதின் பேரில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். 

கொரோனா பெருந்தொற்றால் கடும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் தமிழ்நாட்டிற்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தரவும் உரிய நிவாரணங்களை வழங்கவும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அதிமுக 1 கோடி ரூபாய் வழங்கி இருப்பதாக அந்த கட்சி வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. முதலமைச்சர் கேட்டுக்கொண்டதை அடுத்து பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதியை அளித்து வருகின்றனர். 

இதனிடையே முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி, கொரோனா நிவாரண நிதியாக 5 ஆயிரம் ரூபாயை வழங்கியிருக்கிறார். சிறைவாசிகள் வைப்பு நிதியில் இருந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க சிறை கண்காணிப்பாளரிடம் அவர் கடிதம் வழங்கியுள்ளார்.

Related Stories: