கொரோனா தடுப்பு பணிகளில் தன்னார்வலர்கள்: 27 தொண்டு நிறுவனங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை..!

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக 27 தொண்டு நிறுவனங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனையில் ஈடுபட உள்ளார். கொரோனா தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது உள்ளிட்டவை குறித்து நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆலோசனையில் முக்கிய அமைச்சர்கள், செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி இருக்கும் சூழலிலும் நாளொன்றுக்கு 30 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களும் தொற்றுக்கு ஆளாகிறார்கள். இதில் சிலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. இருப்பினும், தங்களது உயிரையும் பொருட்படுத்தாது தன்னார்வலர்கள் சிலர் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு அரசுக்கு பேருதவி புரிந்து வருகின்றனர். மக்களுக்கு இலவசமாக உணவு வழங்குவது, நோயாளிகளை மருத்துவமனைகளில் கொண்டு சேர்ப்பது, தேவைபபடுவோருக்கு மருந்துகள் வாங்கி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு மகத்தான பணிகளை இந்த இக்கட்டான காலகட்டத்தில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் 27 தொண்டு நிறுவனங்களுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். அக்கூட்டத்தில் தன்னார்வலர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: