20ம் தேதி பதவியேற்பு விழா: கேரள அமைச்சரவையில் பலர் புதுமுகங்கள்..! பெண் எம்எல்ஏ சபாநாயகர் ஆகிறார்

திருவனந்தபுரம்: கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளது. இதில் புது முகங்கள் பலர் அமைச்சர்களாகவும், சபாநாயகராக பெண் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரளாவில் நடந்து முடிந்த சட்ட பேரவை தேர்தலில் இடதுசாரி கூட்டணி 140 தொகுதிகளில் 99 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 2வது முறை ஆட்சி அமைக்கிறது. தொடர்ந்து அமைச்சர்களை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் இடதுசாரி கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், பதவி ஏற்பு விழாவை நடத்துவது குறித்தும், எந்தெந்த கட்சிக்கு எத்தனை அமைச்சர் பதவி வழங்குவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இறுதியில் முதல்வர் உட்பட அமைச்சரவையில் 21 பேருக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. பொறுப்புகள் வழங்கும் உரிமையை முதல்வர் பினராயி விஜயனிடமே விட்டுவிடுவது என்றும், வரும் 20ம் தேதி திருவனந்தபுரம் மத்திய ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழாவை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் கூறியது: புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா வரும் 20ம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் திருவனந்தபுரம் மத்திய ஸ்டேடியத்தில் நடக்கிறது. கவர்னர் ஆரிப் முகமதுகான் முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள். இதில் 500 பேர் மட்டுமே பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

புதுமுகங்களுக்கு வாய்ப்பு

வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ள கேரள அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர் சைலஜா தவிர மற்ற அனைவரும் புதுமுகங்களாக இருப்பார்கள் என தெரியவந்துள்ளது. இவர்களில் கோழிக்கோடு மாவட்டம் பேப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதல்வர் பினராயி விஜயனின் மருமகன் முகம்மது ரியாசுக்கும் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது. கேரள வரலாற்றில் முதன்முறையாக பெண் சபாநாயகர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஆரன்முளா தொகுதியில் 2வது முறையாக வெற்றி பெற்ற சிபிஎம்மை சேர்ந்த வீணா ஜார்ஜ்க்கு சபாநாயகர் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Related Stories: