தி.மலை மாவட்டம் ஆரணியில் கொரோனா நோயாளிகளுக்கு மரத்தடியில் சிகிச்சை..வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு மரத்தடியில் சிகிச்சை அளிக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பல லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனை நிர்வாகம் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டாரத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்வதால் அரசு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள் நிரம்பி வழிகின்றன. 

இதனால் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் தனியார் மருத்துவமனைகளை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆரணி பழைய பேருந்து நிலையம் எதிரே செயல்படும் குழல் என்ற தனியார் மருத்துவமனையில் எவ்வித வசதிகளும் இல்லாமல் கொரோனா நோயாளிகளுக்கு மரத்தடியில் சிகிச்சை அளித்து வருகின்றனர். அருணகிரி சத்திரம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 1 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்த மருத்துவமனை நிர்வாகம் உரிய சிகிச்சை அளிக்காததால் நோயாளி இறந்துவிட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

அரசு நிர்ணயித்ததை விட பலமடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனை நிர்வாகம் அதற்கான ரசீதையும் முறையாக வழங்குவதில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாகும். பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மக்களின் உயிரோடு விளையாடும் இதுபோன்ற மருத்துவமனைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Related Stories: