வயது மூப்பால் மரணமடைந்தார் கரிசல் எழுத்தாளர் கி.ரா.!: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி..!!

புதுச்சேரி: லாஸ்பேட்டை குடியிருப்பில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் வாழ்ந்த இல்லத்தை நினைவு நூலகமாக மாற்றுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமிய கதை, கடிதம் என்று தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் முத்திரை பதித்த முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வைகோ, திருமாவளவன், கி.வீரமணி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

இந்நிலையில், மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கி.ராஜநாராயணன் வாழ்ந்த இல்லத்தை நினைவு நூலகமாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 

மேலும் அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், தமிழ் கதை இலக்கியத்தில் புதிய திசை வழியை உருவாக்கி கொடுத்தவர் என்றும் கரிசல் இயக்கியத்தின் முன்னோடி  கி.ராஜநாராயணன் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். 2009ல் மட்டும் கி.ராஜநாராயணனின் 30 புத்தகங்கள் வெளியாகி சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: