×

வல்லமை தாராயோ...


நன்றி குங்குமம் தோழி


தன்னம்பிக்கையால் தலைநிமிர்ந்தேன்!

பேராசிரியர் டாக்டர் காயத்ரி

“கும்மியடி! தமிழ்நாடு முழுவதும்
குலுங்கிடக் கைகொட்டிக்
கும்மியடி!
நம்மைப்பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று
கும்மியடி!
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப்
பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர்
தலை கவிழ்ந்தார்”

என்ற பாரதியின் வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை. காரணம் நான் அனுபவ ரீதியாக அதை உணர்ந்தவள். பெண்ணாய் பிறந்ததை எண்ணி இப்போது பெருமை கொள்ளும் நான், ஏன் பெண்ணாக பிறந்தேன் என்று வருத்தப்பட்ட,
வேதனைப்பட்ட நாட்கள் அவை.

‘‘இன்றைய தூத்துக்குடி மாவட்டம், முந்தைய திருநெல்வேலி மாவட்டத்திலிருந்த  வைகுண்டம் நான் பிறந்த ஊர். சடங்குகளும், சம்பிரதாயங்களும் நிறைந்திருந்த ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தேன். என்னோடு 2 பெண் குழந்தைகள் என் பெற்றோருக்கு. நான் தான் கடைசிப்பெண். 8ம் வகுப்பு படிக்கும் போது பருவம் அடைந்தேன். மாதவிடாய் காலங்களான அந்த 3 நாட்கள் நான் பட்ட வேதனை சொல்லி மாளாது.

கண்ணே, மணியே, எங்கள் வீட்டு மகாலட்சுமியே என்று அழைத்த பெற்றோர்களே என்னை வீட்டுக்கு பின்புறம் நான்கு சுவர்கள் எழுப்பி, அதன் மேல் சீட் போட்டு தகர கதவுகளால் பூட்டப்பட்டிருக்கும் அறைக்குள் அமர வைத்து விடுவார்கள். இதையெல்லாம் விட உண்பதற்கு ஒரு தட்டு, தண்ணீர் பருக ஒரு டம்ளர் என சிறைக்கைதி போன்ற வாழ்க்கை.

அந்த தட்டில் சோறு போடுவது கூட வேற்று ஆளுக்கு சாதம் இடுவது போன்றுதான் போடுவார்கள். அதே போல தண்ணீர் ஊற்றுவதும் நான் வைத்திருக்கும் டம்ளரில் தொட்டுவிடக்கூடாது என்பதற்காக மேல தூக்கியபடி விடுவார்கள். சாப்பிட ஊறுகாய் தரமாட்டார்கள். துளசி மாடம் அருகே போகக் கூடாது.

கறிவேப்பிலை செடி அருகே செல்லக்கூடாது. அப்பப்பா எவ்வளவு கண்டிஷன்கள். படுத்துக்கொள்ள ஒரு பாய் மட்டும் தான். தலையணை தரமாட்டார்கள். குளிர்காலங்களில் மட்டும் தான் பெட்ஷீட். இதையெல்லாம் விட பெருங்கொடுமை எந்த குளிர்காலம் ஆனாலும் 3வது நாள் வீட்டின் அருகே ஓடும் தாமிரபரணி ஆற்றில் சூரிய உதயத்திற்கு முன்பே குளித்து மூன்று நாட்கள் பயன்படுத்திய ஆடை மற்றும் பாய் முதலானவற்றை துவைத்துக் கொண்டு வரவேண்டும். 8ம் வகுப்பு படிக்கும் போது தொடங்கிய இந்த கொடுமை 12ம் வகுப்பு வரை நீடித்தது.
 
அதன் பின்னர் நான் பாரதியின் வரிகளை சுட்டிக்காட்டி வீட்டிற்குள்ளேயே புரட்சி செய்தேன். சுதந்திரப் போராட்டமே நடத்தினேன். அதற்கு அப்பாவும் அக்காவும் துணை இருந்தனர். அந்தப் புரட்சியை நான் புகுந்த வீட்டிலும் நடத்தினேன். எனது மாமியார், நாத்தனார் ஆகியோரிடமெல்லாம் பேசி, அவர்களை புரிய வைத்து மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யம் போட வேண்டும் என்கிற நிலையை மாற்றி, தங்கச் செயின் அணிந்திருந்தால் அதிலேயே திருமாங்கல்யத்தை(தாலி) கோர்த்து கட்டிக்கொள்ளலாம் என்று கூறினேன்.

அது மட்டுமன்றி அந்த நாட்களில் நைட்டி அணியவிடமாட்டார்கள். நாட்கள் செல்லச் செல்ல அவர்களுக்கு புரிய வைத்து நைட்டி அணிய அனுமதி பெற்றுக்கொண்டேன். இப்படி சின்னச் சின்ன விஷயங்களில் கூட புரட்சி செய்ய வேண்டி இருந்தது. ராஜபாளையம் தனியார் கல்லூரியில் இளங்கலை நிர்வாகவியல் படிக்கும் போதும், அழகப்பா பல்கலையில் எம்ஃபில் படிக்கும் போதும் ஒரு புரட்சியாளராகவே இருந்தேன்.

2002ல் விரிவுரையாளர் பணியை தொடங்கினேன். எனது கல்விப்பணியில் 19 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளேன். செயின்ட் பீட்டர்ஸ் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை துறையில் துறை தலைவர் பணி செய்து வருகிறேன். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று எனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறேன்.

இன்றைய நிலையில் கல்வி பரவலாக்கப்பட்டிருக்கு, எல்லோருக்கும் கல்வி கிடைக்கிறது. ஆனால் வியாபாரமாகி விட்டது. பொறியியல் கல்லூரிகள் அதிகமாக உருவாகி இருக்கிறது. அதன் மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பட்டதாரிகள் பட்டம் பெற்று வெளியே வருகிறார்கள். பட்டதாரிகளை உருவாக்கும் நமது கல்வித்திறன் வல்லுனர்களை உருவாக்கவில்லை. கல்வியின் தரத்தை கடந்த பத்து ஆண்டுகளாக நீர்த்துப்போக செய்து விட்டோம்.

பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இருந்தாலும் 3 பல்கலைக்கழகங்களில் தான் பாடத்திட்டம் வலுவானதாக இருக்கிறதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்ல பெரிய தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு அந்த பல்கலைக்கழகங்கள் படிப்பு முடிந்ததும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கிறது. இதனால் அந்த பல்கலைக்கழகங்களில் சேர்க்கை கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.

அரசின் கண்டு கொள்ளாத தன்மையால் உயர்கல்வி துறையில் பாடத்திட்டங்கள் வலுவில்லை. அதனால் வல்லுனர்கள் உருவாகவில்லை. வேலை வாய்ப்பும் அமையவில்லை. இதுவரை பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கவுன்சிலிங்கை நடத்தி வந்த அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு நடத்தாது. அதை தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகம் நடத்தும் என்று அறிவித்திருக்கிறது.

கல்வித்துறையில் அரசியல் புகுந்ததாலும், அரசியல்வாதிகளே கல்லூரிகளை நடத்துவதாலும் கல்வியில் தரம் குறைந்து போவதற்கு ஒரு வகை காரணம். எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 பாடத்தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களையோ, அவர்கள் எடுத்த மதிப்பெண் விபரங்களையோ தெரியப்படுத்தாமல் இருப்பது மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தாது.

மாறாக எத்தனை மார்க் எடுத்தா என்ன யாருக்கு தெரியப்போகிறது என்கிற அசட்டுத்தனத்தை தான் உருவாக்கும். தேர்வு முடிவுகள் வந்ததும் தேர்வு வெற்றி விகிதாச்சாரங்களை வெளியிடும் அரசு இந்த ஆண்டு வெளியிடவில்லை. இன்றைய மாணவ, மாணவியர்களுக்கு அதிக அளவில் தன்னம்பிக்கை வேண்டும். அது பெரும்பாலானவர்களிடம் இல்லை.

சிறிய அவமானங்களை கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பெற்றவர்களிடமும், தோழமையினரிடமும் சரியாக புரிந்துணர்வு கொள்வதில்லை. கலந்துரையாடல் செய்யும் எண்ணமும் இல்லை. அதற்கான நேரத்தை அவர்கள் உருவாக்கவும் இல்லை. போனில் மூழ்கியே பொழுதை கழிக்கின்றனர்.

தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்களுக்கு போதுமான சம்பளம் தரப்படவில்லை. மாணவிகளுக்கு நான் மீண்டும் கூறுவதெல்லாம் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்பதுதான். நான் 2ம் வகுப்பு படிக்கும் போது இருந்தே பல்வேறு மேடைகளில் பேசி இருக்கிறேன்.

ஆனால் 1997ல் ராஜபாளையத்தில் நடந்த விசுவின் அரட்டை அரங்கம் தான் எனது முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி. தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். 70  ஆயிரம் மாணவர்களுக்கு மேல் கல்வி ஆலோசனை  வழங்கியுள்ளேன். இருப்பினும் என்னால் மறக்க முடியாதது... நான் விரிவுரையாளராக மாணவ - மாணவிகள் முன்பு நின்றதுதான்.

உயரமும் குறைவு, வயதும் குறைவு இந்தப் பெண்ணால் முடியுமா என்றார்கள் என்னோடு பணியாற்றிய வயதில் மூத்த பேராசிரியர்கள். முடியும் என்ற தன்னம்பிக்கையோடு புறப்பட்டேன். உயரத்தை அதிகப்படுத்த ஹீல்ஸ் செருப்புகளை பயன்படுத்தினேன். வயதில் மாற்றத்தைக்காட்ட பக்குவப்பட்டு பேசினேன்.

வகுப்புக்கு போகும் முன் மாணவர், மாணவியர்கள் என்ன மாதிரி இன்று விளக்கம் கேட்பார்கள்... அதற்கு எப்படி பதிலளிக்கப் போகிறோம் என்று தினமும் என்னை தயார்படுத்தினேன். பல நூல்களை வாங்கி தினமும் தேர்வுக்கு போகும் மாணவியைப்போல படித்தேன், என்னை நானே தயார்
படுத்தினேன்.

அப்பொழுதுதான் தெரிந்தது தன்னம்பிக்கை ஹீல்ஸ் செருப்பில் இல்லை  மனதில் இருக்க வேண்டும் என்று என்னை தகுதியாக்கிக் கொண்டேன். வெற்றிக்கண்டேன். நம்மை நாம் அறிந்து கொண்டு தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு போராடுங்கள்... வெற்றி காணுங்கள்...’’ என்ற வாசகங்கள் கூறி விடைப்பெற்றார் பேராசிரியர் டாக்டர் காயத்ரி.

தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

படங்கள்: ஆர்.சந்திரசேகர்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!