கொரோனா நடவடிக்கைகள் குறித்து மாநில அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்...!

புதுடெல்லி: கொரோனா தொற்றை கையாள்வதில் மாநிலங்கள் மற்றும் மாவட்ட அளவிலான கள அதிகாரிகளின் அனுபவங்களை அறிய, அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையால் தினமும் 3.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். கிட்டத்தட்ட 18 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், பலமாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை கள அதிகாரிகள் முன்னின்று மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் சிலர் சிறந்த முறையில் பணியாற்றி தொற்று பரவலை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றை கையாள்வதில் மாநிலங்கள் மற்றும் மாவட்ட அளவிலான கள  அதிகாரிகளின் அனுபவங்களை அறிய, அவர்களுடன் பிரதமர் மோடி, இன்று காலை 11 மணிக்கு கலந்துரையாடினார். அப்போது, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், இரண்டாவது அலையை  கையாள்வதற்கான சுகாதார வசதிகளை மேம்படுத்துவது, தேவையான பொருட்களின் தடையற்ற விநியோகம் குறித்தும் கருத்துகள் கேட்டறியப்பட்டன. நகரங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் நடைபெறும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வதில் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை அதிகாரிகள் வழங்கினர். இன்று நடந்த கூட்டத்தில், கர்நாடகா, பீகார், அசாம், சண்டிகர், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், கோவா, இமாச்சல பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: