குறையும் கொரோனா பாதிப்பு!: உலக நாடுகளுடன் 8 கோடி தடுப்பூசிகளை பகிர்ந்து கொள்வதாக அதிபர் ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு..!!

வாஷிங்டன்: கொரோனா தொற்றினை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உலக நாடுகளுடன் 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை பகிர்ந்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதும் தொற்றினை குறைக்கும் நோக்கில் அதிரடி நடவடிக்கை எடுத்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் பணியினை தீவிரப்படுத்தினார். அமெரிக்காவில் மொத்த மக்கள் தொகையில் 46 விழுக்காட்டினருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சுமார் 11 கோடியே 70 லட்சம் பேருக்கு தடுப்பூசியின் 2வது தவணை செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. 

அதிபர் பைடனின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவில் கொரோனா பரவல் பெருமளவு குறைந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனா பரவல் சரிந்துள்ளதாலும், தேவை குறைந்துள்ளதாலும் தங்கள் வசம் கூடுதலாக உள்ள சுமார் 8 கோடி தடுப்பூசிகளை தட்டுப்பாடு நிலவும் நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள இருப்பதாக அதிபர் ஜோ பைடன் அதிரடியாக அறிவித்துள்ளார். வளர்ச்சி அடைந்த நாடுகள் கொரோனா தடுப்பூசியை, மற்ற ஏழை நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் ஐ.நா. சபை சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தது. 

வளர்ந்த நாடுகள் ஏராளமான அளவில் தடுப்பூசிகளை இருப்பில் வைத்திருப்பதால் உலக அளவில் தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வு நிலவி வருவதாகவும் கருத்து தெரிவித்திருந்தது. இதனை அடுத்து, உலக நாடுகளுடன் 8 கோடி தடுப்பூசிகளை பகிர்ந்துகொள்ள அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது. அடுத்த 6 வாரங்களில் 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்க இருப்பதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடையே பேசிய அதிபர், பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வர எங்களிடம் உள்ள கூடுதல் தடுப்பூசிகளை பிற நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள முடிவு செய்துள்ளோம். 

அதற்காக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச நிறுவனங்கள் மற்றும் பிற கூட்டாளர்களுடன் இணைந்து தடுப்பூசிகள் சமமான முறையில் வழங்கப்படுவதை நாங்கள் முடிவு செய்வோம். அதற்கான தரவுகளும் எங்களிடம் உள்ளன. உலகெங்கிலும் உள்ள கொரோனா பிரச்சனையை எதிர்கொள்வதற்காக சுமார் 8 கோடி அளவிலான கொரோனா தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளோம் என குறிப்பிட்டார். 

Related Stories: