கொரோனா தொற்று ஒருபுறம்; பணிச்சுமை மறுபுறம்!: நீண்ட நேர உழைப்பால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்..WHO எச்சரிக்கை..!!

டெல்லி: கொரோனா தொற்று ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கி கொண்டிருப்பது ஒருபுறம் இருக்க, பணிச்சுமை காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரை பறித்து வரும் சூழலில் நீண்ட நேரம் பணியாற்றுவது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 2016ம் ஆண்டு அதிக நேரம் பணியாற்றிய 7 லட்சத்து 45 ஆயிரம் பேர் பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களால் உயிரிழந்ததாக சர்வதேச சுற்றுச்சூழல் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. 

அதாவது கடந்த 2000 ஆண்டை விட 30 விழுக்காடு அளவிற்கு இத்தகைய உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. வாரம் ஒன்றிற்கு 55 மணி நேரம் அல்லது அதற்கு மேல் பணியாற்றுவது உடல் நலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவன இயக்குநர் மரியா நெய்ரா எச்சரித்துள்ளார். இதனை சரி செய்ய ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, பணிச்சுமையை அதிகரித்துள்ளதாகவும், உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

உலக சுகாதார நிறுவனம், உலக தொழிலாளர் அமைப்பும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் பணிச்சுமை காரணமாக உயிரிழந்தவர்களில் 72 விழுக்காட்டினர் ஆண்கள் என்றும் அவர்கள் நடுத்தர மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. தென்கிழக்கு ஆசியா, மேற்கு பசுபிக் நாடுகள், சீனா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. 

கொரோனா பெருந்தொற்று விளைவாக கூடுதல் நேரம் பணியாற்றும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போதைய சூழலில் குறைந்தபட்சம் 9 விழுக்காட்டினர் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், பணி நேரத்தை அதிகரிப்பது சரியான முடிவு அல்ல என்றும் பணி நேரத்தை குறைத்து அதிக உழைப்பை பெற முடியும் என்றும் சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. 

Related Stories:

>