ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை!: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தற்காலிக ஊழியர் உட்பட 5 பேர் கைது..!!

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்கி  கள்ளச்சந்தையில் விற்பனை செய்த அதே மருத்துவமனை தற்காலிக ஊழியர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒரு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தற்காலிக ஊழியரை தேடி வருகின்றனர். சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவு தற்காலிக ஊழியராக பணியாற்றி வருபவர் பாலகிருஷ்ணன். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த போதும், இவர் போலி ஆவணங்கள் மூலம் பல முறை மருந்து வாங்கியுள்ளார். 

பின்னர் அறுவை சிகிச்சை மையத்தில் பணியாற்றும் மற்றொரு தற்காலிக ஊழியரான மணி என்பவருடன் சேர்ந்து முகமது கலீல் என்பவரிடம் ஒரு குப்பி 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். திருவல்லிக்கேணியில் மருந்து கடை வைத்துள்ள இர்பான் என்பவரிடமும் இவர் மூலம் கைமாற்றி விற்பனை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் நோயாளி ஒருவருக்கு ரெம்டெசிவிர் மருந்து தேவை என விளம்பரம் செய்து அதற்கு யாரெல்லாம் பதிலளிக்கிறார் என கவனித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். 

அதன்படி ஆரிப் என்பவர், தன்னிடம் 25,000 ரூபாய்க்கு ரெம்டெசிவிர் மருந்து இருப்பதாக கூறி விற்பனை செய்ய கீழ்ப்பாக்கம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது, ஆரிப் கொடுத்த தகவலின் பேரில் மீதமுள்ள 5 பேரையும் கைது செய்துள்ளனர். முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்த மருந்தை வாங்க முடியாது. எனவே மருத்துவர்கள் யாரேனும் இதற்கு துணை போனார்களா? என்ற அடிப்படையிலும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Related Stories: