சென்னையில் நிறுவனம், குடியிருப்புகளில் 30 பேர் இருந்தால் தடுப்பூசி பதிவுக்கு பிரத்யேக இணையதளம்: 24 மணிநேரத்தில் 50 ஆயிரம் பேர் பதிவு: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: பெரிய நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் 30க்கும் அதிகமானவர்கள் இருப்பின் தடுப்பூசி ெசலுத்த பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 50 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளதாக  சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ்  தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி  சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்ைன மாநகராட்சி சார்பில் மாநகராட்சி மருத்துவமனைகள், சிறப்பு முகாம்கள் என 152 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் முன்களப்பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து 65 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள், இணைநோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் தடுப்பூசி போடுவது குறைந்துள்ளது.  சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று முன்தினம் 11,312 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் இதுவரை 16,99,245 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெரிய நிறுவனங்களில் பணியாற்றுவோர், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று முகாமிட்டு கொரோனா தடுப்பூசி செலுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதற்காக பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டு 30க்கும் அதிகமானோர் இருக்கும் இடங்களை பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும். இதுவரை 45 வயதுக்கு மேற்பட்ட 20 ஆயிரம் பேரும், 45 வயதுக்கு கீழ்உள்ளவர்கள் 30 ஆயிரம் பேர் என கடந்த 24 மணி நேரத்தில் 50 ஆயிரம் பேர் பதிவு செய்து உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>