மத்திய அரசு பதில் அளிக்காததால் புதிய கல்விக் கொள்கை மீதான விவாதத்தில் தமிழக அரசு பங்கேற்கவில்லை: கல்வித்துறை அமைச்சர் பேட்டி

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை மீதான விவாதத்தில் பங்கேற்பது குறித்து தமிழக அரசு அனுப்பிய கடிதத்துக்கு மத்திய அரசு பதில் அளிக்காமல் விட்டதால், அந்த விவாதத்தில் தமிழக அரசின் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  கூறினார்.  மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்த பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கு பல மாநிலங்களில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதனால் கல்வியாளர்கள், பொதுமக்களின் கருத்து கேட்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டில் அறிவித்தது. ஆனால் முறைப்படி கருத்து கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நீடித்து வருவதால், புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு இணைய தளத்தில் வெளியிட்டது.

தற்போது அந்த புதிய கல்விக் கொள்கை மீது மாநிலங்கள் இடையே விவாதம் நடத்தப் போவதாகவும் அறிவித்து. இதையடுத்து, ஆன்லைன் மூலம் புதிய கல்விக் கொள்கை குறித்த கலந்துரையாடலை மே 17ம் தேதி நடத்தப் போவதாக அறிவித்த மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தில், கொரோனா தொற்று காலத்தில் கல்வி அமைப்பு மேலாண்மை, பள்ளிகளில்  இணைய வழி மூலம் கல்வியை தொடர்வதற்கான வழி முறைகள், புதிய தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவது ஆகியவை குறித்து அந்தந்த மாநிலங்களின் கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் மே 17ம் தேதி கலந்துரையாட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த கடிதம் தமிழக அரசுக்கும் வந்தது.

ஆனால், தமிழகத்தில் உயர்கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சர்களையும், கல்வித்துறை அதிகாரிகளையும் இந்த கலந்துரையாடலில் இணைத்து கலந்துரையாடலை நடத்துவதே ஏற்புடையது என்றும், அப்போதுதான் மிக முக்கியமான கருத்துகளையும், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதின் நிலை மீதான கருத்துகளையும், பரிந்துரைகளையும் தமிழக அரசின் சார்பில் அளிக்க  தயாராக இருப்பதாக குறிப்பிட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த கடிதத்துக்கு மத்திய கல்வித்துறை பதில் அளிக்கவில்லை.இதையடுத்து, மேற்கண்ட புதிய கல்விக் கொள்கை மீதான கலந்துரையாடலில் தமிழக அரசின் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் நேற்று அளித்த பேட்டி:  கடந்த இரு நாட்களுக்கு முன் மத்திய அமைச்சரிடமிருந்து தமிழக பள்ளிக்  கல்வித்துறைக்கு ஒரு மெயில் வந்தது. இந்த கோவிட் காலத்தில் நாட்டின்  கல்வியை எப்படி கையாள்வது? புதிய கல்விக் கொள்கை நிலை எப்படி உள்ளது?  ஆன்லைன் கல்வி எப்படி நடைமுறைப்படுத்தலாம் ஆகிய மூன்று விஷயங்கள் குறித்து  அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டப்பட்டிருந்தது.

இதுகுறித்து  தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றபோது, ‘‘அதிகாரிகள்  மட்டும் கலந்து கொள்வது எப்படி சரியாகும்? இது கூட்டாட்சி தத்துவத்துக்கே  வேட்டு வைப்பது போல உள்ளது. புதிய அரசு அமைந்து, புதிய கல்வித்துறை  அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார். அவரையும் அதில் சேர்க்க வேண்டும்’’ என்றார்.  இதையடுத்து, குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, தமிழக  பள்ளிக்கல்வித்துறை அமைச்சரையும் இதில் சேர்க்க வேண்டும். எங்கள்  கருத்துக்களையும் கேளுங்கள் என கோரிக்கை விடுத்து மத்திய அமைச்சருக்கு  மெயில் அனுப்பினோம். ஆனால் அந்த மெயிலுக்கு இதுவரை மத்திய அரசிடமிருந்து  எந்த பதிலும் வரவில்லை. எனவே மத்திய அரசு நடத்திய கூட்டத்தில் தமிழக  அதிகாரிகள் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தை புறக்கணித்தோம் என்பதை  காட்டிலும் அதில் பங்கேற்கவில்லை என்பதே சரியாக இருக்கும். இது அரசியல்  செய்வதற்கான களம் அல்ல. நாங்கள் அனுப்பிய இ-மெயிலுக்கு பதில் வராத  காரணத்தால் மத்திய அமைச்சர் நடத்திய கூட்டத்தில் தமிழக அதிகாரிகள்  பங்கேற்கவில்லை.

2019ம் ஆண்டு தேசிய கல்வி கொள்கை வரைவு வந்தபோது திமுக  தலைவர் தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின், அதில் உள்ள சாதக, பாதகங்கள் என்ன  என்பது குறித்து விரிவான அறிக்கை கொடுத்திருந்தார். இதுதொடர்பாக திமுக  எம்பிக்களும் பார்லிமென்டில் முன்வைத்தனர். ஆனால் 2020ம் ஆண்டு புதிய  கல்விக் கொள்கை வந்தபோது நாம் என்னென்ன ஆலோசனைகள் வழங்கியிருந்தோமோ அவை  எதுவும் இடம் பெறவில்லை.அண்ணாவால் கொண்டு வரப்பட்டு, கலைஞரால்  பாதுகாக்கப்பட்ட இருமொழிக் கொள்கைக்கு வேட்டு வைக்கும் விதமாகவும், மும்மொழிக்  கொள்கையை திணிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை வரைவு உள்ளதாக  தெரிவித்தோம். புதிய கல்விக் கொள்கை கிராமப்புற மாணவர்களுக்கு ஒத்து வராது.

இடஒதுக்கீடு குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. எனவே இதற்கெல்லாம் ஒரு  தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதால் அமைச்சர் என்ற முறையில் அந்த  கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அதற்குரிய  பதில் வராததால் பங்கேற்கவில்லை. பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது  குறித்து விரைவில் அறிவிக்கப்படும். நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்றம்  கூடும்போது பேசுவோம். ஏற்கனவே அனைத்துக்கட்சிகள் கூடி நீட் தேர்வு ரத்து  தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், நீட் தேர்வு ரத்து  தொடர்பான தீர்மானத்துக்கு அழுத்தம் கொடுப்போம் என்றார்.

Related Stories: