×

8 மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 8 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. மருத்துவம் சார்ந்த பணிகளில் அனைத்துத் துறைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும், மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமைச்சர்கள் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பது மற்றும் அதற்கு தகுந்த சிகிச்சையை அளிப்பது உள்ளிட்ட பணிகளை முன்னுரிமை கொண்டு அரசு செயல்படுகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் 8 அரசு மருத்துவ கல்லூரி முதல்வர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட உத்தரவு: மருத்துவக் கல்வி இயக்குனரகத் தேர்வுக்குழு செயலாளராக இருந்த சாந்திமலர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்படுகிறார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த வசந்தாமணி, மருத்துவக்கல்வி இயக்குனரகத் தேர்வுக்குழுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த ஜெ.சங்குமணி, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்படுகிறார். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக இருந்த ரத்தினவேல், மதுரை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்படுகிறார். இதேபோல், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆர்.முருகேசன், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் சிறப்பு அதிகாரியாக இருந்த வள்ளி சத்தியமூர்த்தி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்படுகிறார். கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக இருந்த ஆர்.சுகந்தி ராஜகுமாரி, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்படுகிறார். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக இருந்த திருவாசகமணி கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



Tags : 8 Medical College Principals Transfer: Government of Tamil Nadu Order
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...