கீழமை நீதிமன்ற இடைக்கால உத்தரவுகள் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிப்பு: தலைமை நீதிபதி அமர்வு அறிவிப்பு

சென்னை: கீழமை நீதிமன்றங்களின் அனைத்து இடைக்கால உத்தரவுகளையும் ஜூன் 30 வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு திருநெல்வேலி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பலியானதைத் தொடர்ந்து, கீழமை நீதிமன்ற பணிகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைத்து பிறப்பித்துள்ள உத்தரவை  சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, கீழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா தொற்றுக்கு நீதிபதிகளும், நீதிமன்ற ஊழியர்களும் ஆளாகியுள்ளனர்.

இதையடுத்து, கீழமை நீதிமன்ற பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், கீழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுகிறது. குற்ற வழக்கில்  கைது செய்யப்பட்டவர்களின் நீதிமன்ற காவல் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றம், சட்டவிரோத கட்டுமானங்கள் இடிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories:

>