மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து முதல் முறையாக கோப்பையை முத்தமிட்டது பார்சிலோனா

கோதென்பர்க்: மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், பார்சிலோனா அணி முதல் முறையாக பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. ஸ்வீடனின் கோதென்பர்க் நகரில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் செல்சீ அணியுடன் மோதிய பார்சிலோனா மகளிர் அணி, தொடக்கத்தில் இருந்தே முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. செல்சீ கோல் பகுதியை முற்றுகையிட்டு கடும் நெருக்கடி கொடுத்த அந்த அணிக்கு, முதல் நிமிடத்திலேயே லியூபோல்ஸ் அபாரமாக கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். தொடர்ந்து புடெல்லாஸ் 14வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்து அசத்தினார். பொன்மாட்டி (20வது நிமிடம்), ஹான்சென் (36வது நிமிடம்) கோல் அடிக்க, பார்சிலோனா அணி இடைவேளையின்போது 4-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் இரு அணிகளுமே தற்காப்பு  ஆட்டத்தில் கவனம் செலுத்தியதால் கோல் ஏதும் விழவில்லை.

ஆட்ட நேர முடிவில், பார்சிலோனா அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று மகளிர் சாம்பியன்ஸ் லீக் தொடரில் முதல் முறையாக கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்தது. இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஸ்பெயின் மகளிர் அணி என்ற பெருமையையும் வசப்படுத்தியது. சாம்பியன்ஸ் லீக் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் கிளப் என்ற சாதனையும் பார்சிலோனாவுக்கு கிடைத்துள்ளது.

Related Stories:

>