வரதட்சணை கொடுமையால் மலையாள நடிகரின் மனைவி தற்கொலை

திருவனந்தபுரம்: மறைந்த பிரபல மலையாள வில்லன் நடிகர் ராஜன் பி. தேவின் மகனும், நடிகருமான உண்ணி ராஜனின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சனை கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக இருந்தவர் ராஜன் பி. தேவ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மகன் உண்ணி ராஜன் பி. தேவ். இவர் சில மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரியங்கா (25) என்பவருக்கும் கடந்த இரு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 35 பவுன் நகை மற்றும் பணம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கூடுதல் வரதட்சணை கேட்டு உண்ணி ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரியங்காவை துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக பலமுறை பிரியங்கா தனது பெற்றோரிடமும், அண்ணன் விஷ்ணுவிடமும் போன் செய்து விவரத்தைக் கூறியுள்ளார். இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன் பிரியங்கா அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.  இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் பிரியங்கா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டார்.  இதுகுறித்து அறிந்த போத்தன்கொடு போலீசார் விரைந்து சென்று பிரியங்காவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தன்னுடைய தங்கையின் தற்கொலைக்கு நடிகர் உண்ணி ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என்று பிரியங்காவின் அண்ணன் விஷ்ணு போலீசில் புகார் கொடுத்துள்ளார். வரதட்சணை கேட்டு உண்ணி ராஜன் மற்றும் குடும்பத்தினர் பிரியங்காவை அடிக்கடி தாக்கி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: