கேரள அமைச்சரவை 20ம் தேதி பதவியேற்பு: 21 பேர் அமைச்சர்கள் ஆகின்றனர்

திருவனந்தபுரம்: கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான 2வது அமைச்சரவை வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளது. பினராய் விஜயன் உட்பட 21 பேர் அமைச்சர் ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் கடந்த மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 140 இடங்களில் இந்த கூட்டணி 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. கேரள அரசியல் வரலாற்றில் ஒரு கூட்டணியும், ஒரு முதல்வரும் தொடர்ந்து ஆட்சியில் அமர்வது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை முடிந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆனபிறகும் இதுவரை புதிய அரசு பதவி ஏற்கவில்லை.  கடந்த சில தினங்களாக கூட்டணி கட்சிகளிடையே அமைச்சர்களை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட் டங்கள் நடந்தன. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நேற்று இடதுசாரி கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் உட்பட அமைச்சரவையில் 21 பேருக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் வரும் 20ம் தேதி திருவனந்தபுரம் மத்திய ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழாவை நடத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பதவியேற்பு விழாவுக்கு அதிகபட்சமாக 250 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் பதவி ஏற்பு விழாவுக்கு வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக பதவியேற்பு விழா நடைபெறும் இடத்தில் ஆன்டிஜன் பரிசோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories:

>