கொரோனா சிகிச்சைக்கான 2டிஜி தடுப்பு மருந்து அறிமுகம்: தண்ணீரில் கலந்து குடிக்கலாம்

புதுடெல்லி: ஆக்சிஜனை நம்பியிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு நல்ல பலனைத் தரக்கூடிய, 2டிஜி எனும் புதிய தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை குளுக்கோஸ் போன்ற தண்ணீரில் கலந்து குடிக்கலாம். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆர்டிஓ) அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து 2 டியாக்ஸி-டி-குளுக்கோஸ் (2டிஜி) எனும் கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவிலான இந்த மருந்து, மருந்துவ பரிசோதனையில் கொரோனா நோயாளிகளுக்கு நல்ல பலன் அளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஆக்சிஜனை நம்பி இருக்கும் நோயாளிகளுக்கு இந்த மருந்து தரப்பட்டதும், அவர்கள் விரைவில் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, கடந்த 1ம் தேதி  2-டிஜி மருந்தை அவசர காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்தது.

இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர் முறைப்படி 2டிஜி மருந்தை நேற்று அறிமுகம் செய்தனர். டிஆர்டிஓ தலைமையகத்தில் நடந்த அறிமுக விழாவில் பேசிய ராஜ்நாத் சிங், ‘‘இந்த மருந்து கொரோனா நோயாளிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை கொண்டு வந்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் இது மைல்கல். நாட்டின் அறிவியல் வளர்ச்சியை, சக்தியை வெளிப்படுத்தும் மிகப்பெரிய உதாரணம் இந்த மருந்துதான். நாம் ஓய்வெடுத்து அமர்வதற்கு இது நேரம் அல்ல, நாம் களைப்படையவும் கூடாது’’ என்றார்.மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசுகையில், “இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்துக்கே இந்த 2டிஜி தடுப்பு மருந்து உதவப்போகிறது’’ என்றார்.

Related Stories: