இந்தியாவின் அட்லைனுக்கு 4வது இடம் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் மகுடம் சூடினார் மெக்சிகோ அழகி

வாஷிங்டன்: மிஸ் யுனிவர்ஸ் 2020 அழகிப் போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த 26 வயதான ஆண்ட்ரியே மெஸா மகுடம் சூடினார். இந்திய அழகி அட்லைன் கேஸ்டலினோ 4ம் இடம் பெற்றார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி வரலாற்றில் முதல் முறையாக கடந்த ஆண்டு நடக்கவில்லை. இதைத்தொடர்ந்து உலக நாடுகளில் பாதிப்பு குறையத் தொடங்கிய நிலையில், 69வது மிஸ் யுனிவர்ஸ் 2020 அழகிப் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சமீபத்தில் தொடங்கியது. இப்போட்டியில் 74 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்ற 22 வயதான அட்லைன் கேஸ்டலினோ இந்தியா சார்பில் பங்கேற்றார். இதன் இறுதிச் சுற்றுப் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. டாப்-21 அழகிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இதில், மெக்சிகோவைச் சேர்ந்த ஆண்ட்ரியே மெஸா மிஸ் யுனிவர்ஸ் 2020 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2019ல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற முதல் கறுப்பின அழகியான தென் ஆப்ரிக்காவின் ஜோஜிபினி மகுடம் சூட்டினார். முதல் ரன்னர்-அப் ஆக பிரேசில் அழகி ஜூலியா காமாவும், 2வது ரன்னர் அப் ஆக பெரு அழகி ஜனிக் மசோடாவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய அழகி அட்லைன் 3வது ரன்னர் அப், அதாவது டாப்-4 இடத்தை பிடித்தார். குவைத்தில் பிறந்தவரான அட்லைனின் பூர்வீகம் கர்நாடகா மாநிலம் உடுப்பி ஆகும். இவர் பள்ளி, கல்லூரி படிப்பை மும்பையில் படித்துள்ளார். பட்டம் வென்ற அட்லைனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அழகு முகத்தில் அல்ல இதயத்தில் இருக்கிறது

மகுடம் சூடிய ஆண்ட்ரியே கேள்வி-பதில் பிரிவில், ‘‘நீங்கள் எப்படி தோற்றமளிக்கிறீர்கள் என்பதில் அழகு இல்லை. அழகு என்பது முகத்தில் அல்ல, இதயத்தில் இருக்கிறது. நாம் அனைவரும் ஒரே சமூகமாகவும் ஒரே மாதிரியாக முன்னேறுவோம்’’ என்றார். மேலும், நாட்டின் அதிபராக இருந்தால் கொரோனா பரவலின் ஆரம்பகட்டதிலேயே முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக ஆண்ட்ரியே கூறியது போட்டியாளர்களை கவர்ந்தது. தற்போதைய கொரோனா சூழலில் சுகாதாரம், பொருளதாரம் இரண்டையும் சமமாக அரசுகள் கையாள வேண்டுமென இந்திய அழகி அட்லைன் கூறினார்.

கவனம் ஈர்த்த மியான்மர் அழகி

இறுதிச் சுற்றில் பங்கேற்ற மியான்மர் அழகி துஷார் வின்ட் லிவின், தனது நாட்டில் ராணுவ ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்கும் விதமாக ‘மியான்மருக்காக வேண்டிக் கொள்ளுங்கள்’ என்ற பதாகையுடன் தோன்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கடந்த பிப்ரவரி மாதம் மியான்மரில் ராணுவ புரட்சி ஏற்பட்டு, ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றி உள்ளது. இதை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டத்தில் சுமார் 800 பேர் பலியாகி உள்ளனர். 4,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: