முதல்வர் பொது நிவாரணத்துக்கு இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 10 லட்சம் நிதி உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அளித்தனர்

சென்னை: முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இந்திய,மார்க்சிஸ்ட் சார்பில் தலா 10 லட்சம் நிதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக  வழங்கப்பட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் முத்தரசன், துணைச் செயலாளர் வீரபாண்டியன், செயற்குழு உறுப்பினர் பெரியசாமி ஆகியோர் நேற்று தமிழக முதல்வரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் நிதி வழங்கினர். மேலும் தடுப்பு மருந்து தயாரிப்புக்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய அரசின் இந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை மாநில அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை விண்ணப்பம் முதல்வரிடம் வழங்கப்பட்டது.

கோரிக்கை விண்ணப்பத்தில் கூறியிருப்பதாவது: தடுப்பூசி மருந்துகளை தமிழ்நாடு அரசு நேரடியாக கொள்முதல் செய்து, மக்களுக்கு வழங்கும் முயற்சி பெரும் நம்பிக்கையளிக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள்  மாநிலங்களவை உறுப்பினருமான ரங்கராஜன் ஆகியோர் நேற்று தமிழக முதல்வர் மு.க.  ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து முதல்வர் பொது நிவாரண  நிதிக்கு  10 லட்சம் வழங்கினர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத  ஊதியத்தையும் வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் கொரோனா  பெருந்தொற்றிலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற தமிழக அரசு மேற்கொண்டு வரும்  சவால்கள் நிறைந்த போராட்டத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள். தமிழக மக்களை  பாதுகாக்க அரசு மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு  ஒத்துழைப்பு வழங்குவோம். அதிகாரிகளை அழைத்து அனைத்து மாவட்ட  ஆட்சியர்களுக்கும் நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் பைனான்ஸ்  நிறுவனங்கள் கடன் வசூலிப்பதை உடனடியாக நிறுத்துவதற்கு முதல்வர் உரிய  உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Related Stories: