தமிழக காங்கிரஸ் சட்டசபை தலைவர் யார்? சீனியர் காங். எம்எல்ஏக்கள் இடையே கடும் போட்டி: தனித்தனியாக கருத்து கேட்டு வாக்கெடுப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 18 இடங்களில் வென்றது. தற்போதைய நிலவரப்படி, அதிமுகவுக்கு அடுத்தபடியாக சட்டமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. சட்டசபையில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தங்களது சட்டமன்ற தலைவரை அறிவித்து விட்டது.  வழக்கம் போல காங்கிரஸ் கட்சியில் ஏற்படும் கடும் போட்டியின் காரணமாக இன்னும் சட்டமன்ற தலைவரை அறிவிக்க முடியாமல் இழுபறியில் நீடிக்கிறது. ‘சட்ட சபையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்?’ என்பதை முடிவு செய்வது தொடர்பாக, கடந்த வாரம் சத்தியமூர்த்தி பவனில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 13 பேர் புதிய முகங்களாக இருப்பதால், `மூன்றாவது முறையாக எம்எல்ஏவாக தேர்வான சீனியர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்’ என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

அந்த வரிசையில், இரண்டு மற்றும் 3 முறை எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களிடையே இந்த பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் எம்எல்ஏக்கள் பிரின்ஸ், விஜயதரணி, ராஜேஷ், முனிரத்தினம் ஆகியோர் இடையே போட்டி நிலவி வருகிறது.  இந்நிலையில், 12ம் தேதி கூடிய சட்டமன்றக் கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி மோதல் பகிரங்கமாக வெடித்து.அந்த நேரத்தில் விஜயதரணியும் கையை உயர்த்தியதால் சலசலப்பு ஏற்பட்டது. தற்போதைய எம்எல்ஏக்களில் 10 பேர் முதல்முறை எம்எல்ஏ ஆனவர்கள். 5 பேர் 2  முறை எம்எல்ஏஆனவர்கள். 2 பேர் 3 முறை எம்எல்ஏ ஆனவர்கள். ஒரே ஒருவர் 4 முறை  எம்எல்ஏ ஆனவர்.  இவர்களில் ஒருவரை சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக தேர்வு செய்வது குறித்து எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்பதற்காக டெல்லி மேல்சபை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, புதுவை எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் நேற்று சென்னை வந்தனர்.

இதையடுத்து சத்தியமூர்த்தி பவனில் நேற்று பிற்பகல் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ்.இளங்கோவன், தங்கபாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், எம்எல்ஏக்கள் ஒவ்வொருவரிடமும் மேலிடக் குழு தனித்தனியாக கருத்து கேட்டனர். அப்போது, சீனியர் எம்எல்ஏக்களில் யாரை தேர்வு செய்தால் சட்டமன்றத்தில் சிறப்பாக செயல்படுவார்கள் என்பது குறித்து அவர்களிடம் வாக்கெடுப்பு நடத்தினர். கூட்டத்தில் கலந்து கொண்ட எம்எல்ஏக்கள் யாருக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதை டிக் செய்து கொண்டனர்.

இதில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்பதை அறிக்கையாக தயார் செய்து, அதை டெல்லி மேலிடத்துக்கு அனுப்பி வைக்கின்றனர். அதன் அடிப்படையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி காங்கிரஸ் சட்டமன்ற தலைவரை தேர்வு செய்து அறிவிக்க உள்ளார். கட்சி ஈடுபாடு, சட்டசபை செயல்பாடு, விவாதிக்கும் திறன், மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையாக வைத்து கேள்விகளை எழுப்பி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: