உயரே

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

பெண்களுக்கு எதிரான வன்முறை தலைதூக்கியிருக்கும் ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதற்கு தினம் தினம் அரங்கேறும் நிகழ்வுகளே சாட்சி. அதுவும் காதல், திருமணம், அன்பு என்ற பெயரில் பெண்களுக்கு நிகழும்  வன்முறைகள் இன்னும் கொடுமை.

‘‘அறிமுகமில்லாத நபர்களை விட, தனக்கு நன்கு அறிமுகமான நபர்களாலேயே பெண்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளாகிறார்கள்...’’ என்கிறது சமீபத்திய ஆய்வு. இப்படி பாதிப்புக்குள்ளான பெண்கள் என்ன ஆனார்கள்? பாதிப்பிலிருந்து மீண்டார்களா? அவர்களின் எதிர்காலம் என்னவானது? பெண்களைப் பாதிப்புக்குள்ளாக்கியவர்கள் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார்களா? போன்ற கேள்விகளுக்குச் சரியான பதிலே நமக்குக்

கிடைப்பதில்லை.

இந்தச் சூழலில் தான் ‘உயரே’ என்ற மலையாளப் படம் வெளியாகி பலரின் பாராட்டுகளைக் குவித்ததோடு மட்டுமல்லாமல், வசூலையும் அள்ளிக்

கொண்டிருக்கிறது. விமானியாக வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து வருகிறாள் பல்லவி. அவளுக்கு எல்லாமே அப்பா தான். சின்ன வயதில் சரியான நண்பர்கள் இல்லாமல் தனித்து வாழ்ந்த அவளுக்குப் பள்ளியில் சீனியரான கோவிந்த் என்பவனின் நட்பு கிடைக்கிறது.

பள்ளியில் படிக்கும்போது ஹாஸ்டலில் நடந்த ஒரு சம்பவத்தால் பெருத்த அவமானத்துக்குள்ளாகிறாள். அந்தச் சம்பவத்துக்காக அவளுடன் படிக்கும் மாணவிகள் உட்பட எல்லோரும் பல்லவியைக் கேலி செய்கிறார்கள். இந்தச் சூழலில் அவளுக்கு உறுதுணையாக இருந்தது கோவிந்த் மட்டுமே. அதனால் பல்லவிக்குக் கோவிந்த் மீது நட்பைத் தாண்டிய ஒரு ஈர்ப்பு; தனிப்பட்ட பிரியம். அது நாளடைவில் கோவிந்தின் மீதான காதலாக மலர்கிறது.

 பல்லவி வேறு யாரையும் விட கோவிந்தை முழுமையாக நம்புகிறாள். தன் தந்தைக்கு இணையாக அவனைக் கருதுகிறாள். பல்லவியின் காதல் விஷயம் தந்தைக்குத் தெரிய வர, அவரும் அதை ஏற்றுக்கொள்கிறார். கோவிந்த் ஒரு இரு சக்கர வாகனம் விற்பனை செய்யும் ஷோரூமில் வேலை செய்து வருகிறான்.

தாழ்வு மனப்பான்மையுடையவன். யாருடனும் அவ்வளவு சுலபத்தில் நெருங்கிப் பழகாதவன்.  பல்லவியைத் தனக்கு மட்டுமே சொந்தம் என்று கருதுபவன். அவளின் உடை சிறிது விலகினாலும் எரிந்து விழுகிறான். அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று பல கட்டுப்பாடுகளை விதிக்கிறான். பொசஸிவ் காரணமாக பல்லவி போனை எடுக்கவில்லை என்றால் அவள் இருக்கும் இடத்தைத் தேடி வந்துவிடுகிறான்.

கொஞ்சம் கூட பல்லவியை அவன் சுதந்திரமாக விடுவதில்லை. இருந்தாலும் பல்லவி அவனை எதுவும் சொல்வதில்லை. எப்போதும் போல காதலுடனே அவனை அணுகுகிறாள். சின்ன வயதில் தனக்கு யாருமே இல்லாதபோது கூட இருந்தவன் கோவிந்த் மட்டுமே என்ற நன்றியுணர்வு தான் இதற்குக் காரணம். நாட்கள் நகர்கிறது. பல்லவி விமானி பயிற்சிக்காக வெளியூருக்குச் செல்கிறாள்.

அங்கே புதிய புதிய நண்பர்கள் அவளுக்குக் கிடைக்கிறார்கள். குறிப்பாக விஷால் என்ற ஒரு நண்பனும் கிடைக்கிறான். அவன் ஏர்லைன்ஸ் சேவைக்கு ஆட்களை நியமிக்கும் தொழில் அதிபரின் மகன். தந்தையின் நிறுவனத்தில் முக்கிய பதவியிலும் இருப்பவன். ஒரு நாள் விமானி பயிற்சி பெறும் நண்பர்களுடன் விருந்துக்குச் செல்கிறாள் பல்லவி.

அப்போது அவளை போனில் அழைத்துக்கொண்டே இருக்கிறான் கோவிந்த். ஆனால், பல்லவி அதை எடுப்பதில்லை. கோபமடையும் கோவிந்த் பல்லவி இருக்கும் இடத்தைத் தேடி வந்துவிடுகிறான். அவளை நண்பர்கள் முன் அவமானப்படுத்துகிறான். தேவையில்லாத தொந்தரவுகளைத் தருகிறான். ஆனால், எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறாள் பல்லவி.  

தன்னைவிட்டு வேறு யாருடனோ போய்விடுவாளோ என்று சந்தேகிக்கிறான் கோவிந்த். சரியாக திட்டமிட்டு பல்லவியின் முகத்தில் ஆசிட்டை அடித்துவிடுகிறான். பல்லவியின் முகத்தில் ஒரு பக்கம் முற்றிலும் சிதைந்துவிடுகிறது. அந்த முகத்துடன் விமானியாகவோ, விமானத்தில் பணிப்பெண்ணாகவோ வேலை செய்வது என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

இந்த துயரச் சூழலில் பல்லவி என்ன செய்தாள்? கோவிந்த் தண்டிக்கப்பட்டானா? பல்லவி வீட்டோடு முடங்கிப் போனாளா அல்லது தனது கனவை நிறைவேற்றினாளா? என்பதே படத்தின் மீதிக்கதை. கோவிந்த் பல்லவியின் முகத்தில் ஆசிட் அடிக்க ஒரு நிமிடம் கூட ஆவதில்லை. ஆனால், ஆசிட் அடித்ததால் உண்டான பாதிப்பால் தனது வாழ்க்கை முழுவதும் பல்லவி கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.

அந்தக் கஷ்டம் அவளை மட்டுமல்ல, அப்பா, நண்பர்கள் என அவளைச் சுற்றியிருக்கும் எல்லோரையும் பாதிக்கிறது. இவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு மன உறுதியுடன் போராடும்போது அவளின் உள்ளழகில் ஆசிட் அடிக்கப்பட்ட முகமும் பிரகாசிக்கிறது. வெளித்தோற்றத்தை விட, மனதின் அழகு முக்கியம் என்று சொல்லாமல் சொல்லிச் செல்கிறது இப்படம்.

அந்த மன அழகு வெளிப்படும் போது அவளை அருவெறுப்புடன் தள்ளி வைத்தவர்களே அரவணைத்துக் கொள்கிறார்கள். இறுதியில் மனதுக்குள் மென்மையான உணர்வுகளையும், தன்னம்பிக்கையையும் புகுத்தி நிறைவடைகிறது ‘உயரே’. பல்லவியாகவே வாழ்ந்திருக்கிறார் பார்வதி. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வலியை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்.  

எங்கேயும் பிசகாமல் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாகச் சொல்லியிருக்கிறது திரைக்கதை. இப்போது திரையில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் இயக்குனர் மனு அசோகன்.  இந்தப் படத்தைப் பார்த்தவன் எந்தப் பெண்ணின் மீதும் ஆசிட் அடிக்க மாட்டான். ஆசிட் அடிக்கவேண்டும் என்ற எண்ணமுடையவன் பார்த்தாலும் அவன் எண்ணத்தை மாற்றிக்கொள்வான். அதுவே இப்படத்தின் வெற்றி.                

தொகுப்பு: த.சக்திவேல்

Related Stories: