கொரோனா 2வது அலையை சமாளிக்க முடியாமல்திணறும் மத்திய அரசு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: கொரோனா 2வது அலையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் மத்திய அரசு தத்தளிக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டியுள்ளார். சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:  கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்  கொள்கிறேன். அதே நேரத்தில், கொரோனா பரவல் தடுப்பு பணியில் மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக் கழித்துள்ளது.  கொரோனா முதல் அலையின் போது, என்ன செய்வது என்று தெரியாமல் இருந்ததை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் முதல் அலையில் கற்றுக் கொண்ட பாடத்தின் அடிப்படையில் கொரோனா 2வது அலை பரவுவதற்கு முன்பே தேவையான தடுப்பூசிகளை தயாரித்திருப்பதோடு, தேவையான ஆக்சிஜனையும் உற்பத்தி செய்திருக்க வேண்டும். கொரோனா 2-வது அலையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் மத்திய அரசு தத்தளிக்கிறது.

மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த முழு அடைப்புக்கும், மோடி, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கொண்டுவந்த முழு அடைப்புக்கும் வித்தியாசம் உள்ளது. அவர்கள் ஒரே நாள் இரவில் அறிவித்த ஊரடங்கால் ஏராளமான தொழிலாளிகள் தங்கள் இல்லங்களுக்கு செல்ல முடியாமல் கால்நடையாக நடந்து சென்றதை பார்த்தோம். ஆனால் மு.க.ஸ்டாலின் ஊரடங்குக்கு 2 நாட்களுக்கு முன்பாக சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்து ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் ஊருக்கு செல்ல வழிவகை செய்தார். பொதுமக்களின் சிரமங்களை அறிந்து அவற்றை நிறைவு செய்த பின்னர் தான் முழு ஊரடங்கை அறிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: