×

வீடு வீடாக கொரோனா பரிசோதனை செய்யும் பெண் களப்பணியாளரிடம் அத்துமீறல்: கடைக்காரர் கைது

சென்னை: பெண் முன்களப்பணியாளரிடம் அத்துமீறலில்ஈடுபட்ட கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் முன் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தினசரி வீடு வீடாக சென்று கொரோனா அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்து வருகின்றனர். அதன்படி பாரிமுனை அடுத்த முத்தியால்பேட்டை பிடாரி அம்மன் கோயில் தெருவில் பெண் முன்களப்பணியாளர் ஒருவர் நேற்று முன்தினம் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது, அதே பகுதியில் கடை நடத்தி வரும் சதக்கத்துல்லா (52) என்பவர், பெண் முன்களப்பணியாளரின் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது.

அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, சதக்கத்துல்லாவை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், அவரை துறைமுகம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண் முன்களப்பணியாளரிடம் தவறாக நடக்க முயன்றது, பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

Tags : Violation of female field worker inspecting corona from house to house: shopkeeper arrested
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்