ஒரு நாளில் 20,486 பேர் குணமாகி வீடு திரும்பினர் தமிழகத்தில் 33,075 பேர் பாதிப்பு: சிகிச்சை பலனின்றி 335 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்று மட்டும் 20,486 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி நேற்று ஒரேநாளில் 335 பேர் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை 18,005 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சென்னையில் 7 நாட்களில் 1,400க்கும் மேல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. மற்ற மாவட்டங்களை விட, சென்னையிலும் பாதிப்பு கூடுதலாக இருந்தது. ஆனால் கடந்த இரு நாட்களாக கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் நேற்று 33,072 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் 33,282 பேரும், கடந்த 15ம் தேதி 33,658 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் கடந்த இரு நாட்களாக பாதிப்பு சற்று குறையத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னையிலும் கடந்த 5 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியது. அதாவது 7 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு கடந்த 13ம் தேதி 6,991 பேரும், 14ம் தேதி 6,538 பேருக்கு என இரண்டு நாட்கள் குறைந்த நிலையில் 15ம் தேதி 6,640 ஆக சற்று அதிகரித்தது. ஆனால் 16ம் தேதி 6,247 ஆகவும், 17ம் தேதி நேற்று 6,150 என குறையத் தொடங்கியுள்ளது. மேலும் கடந்த 11ம் தேதி 7,146 பேரும், 12ம் தேதி 7,564 பேரும் நேற்று 6,150 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 7 நாட்களில் 1,400க்கும் மேல் தொற்று குறைந்துள்ளது. இது குறித்து மாநில சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நேற்று 1,56,278 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 33,075 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக நேற்று சென்னையில் மட்டும் 6,150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,31,291 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 20,486 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,81,690 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 335 பேர் நேற்று உயிரிழந்தனர். இதில் 152 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 183 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இதையடுத்து மொத்தம் 18,005 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: