கொரோனா நிவாரண நிதிக்காக மணக்கோலத்தில் வந்து கலெக்டரிடம் 50,000 வழங்கிய புதுமண தம்பதி

நாகை: நாகை புத்தூரை சேர்ந்த சிவக்குமார் மகன் ஷெரின்ராஜூ. இன்ஜினியரான இவருக்கும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்த விக்டர்ராஜ் மகள் சூர்யாவுக்கும் நாகையில் உள்ள புனிதலூர்து மாதா தேவாலயத்தில் நேற்று திருமணம் நடந்தது. பின்னர் மணமக்கள் மணகோலத்திலேயே நாகை கலெக்டர் பிரவீன் பி நாயரை சந்தித்து முதல்வர் பொது நிவாரண நிதியாக 50ஆயிரத்தை வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர், மணமக்களை பாராட்டியதுடன் திருமண வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.இது குறித்து ஷெரின்ராஜூ, சூர்யா ஆகியோர் கூறுைகயில்,“எங்களது திருமணத்தை வெகு விமரிசையாக நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா சூழலில் அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. எனவே, கொரோனா நோய்தடுப்பு நிவாரண பணிகளுக்காக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்க முடிவு செய்தோம்.

இதற்காக திருமணம் முடிந்த கையோடு 50 ஆயிரத்தை கலெக்டரிடம் கொடுத்துள்ளோம்”என்றனர். 2 ஆயிரம் வழங்கிய மூதாட்டி: தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே சுக்காங்கல்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (78). மனைவி ரத்தினம்மாள் (74). பிள்ளைகள் கவனிப்பில் வீட்டில் தனியாக வாழ்ந்து வருகின்றனர். ரேஷன் கடைக்கு வந்து 2 ஆயிரம் வாங்க முடியாத  ரத்தினம்மாள் உள்பட 5 முதியவர்களுக்கு கூட்டுறவு சங்க செயலாளர் முருகராஜன் நேரில் சென்று வழங்கினார். அப்போது ரத்தினம்மாள், கொரோனாவை தடுக்க முதல்வர் ஸ்டாலின் ஐயா பாடுபட்டு வருகிறார். அதனால் அவர்களுக்கு உதவியாக இந்த 2 ஆயிரத்தை முதலமைச்சர் நிவாரணத்திற்கு கொடுத்து விடுங்கள் என்று திருப்பி கொடுத்து விட்டார்.

Related Stories:

>