ஒரே நேரத்தில் 2 நோயாளிகளுக்கு சப்ளை செய்யலாம் 5 நிமிடத்தில் ஆக்சிஜன் உற்பத்தி: குறைந்த செலவில் இயந்திரம் தயாரிப்பு: அரக்கோணம் பொறியியல் பட்டதாரிகள் அசத்தல்

ராணிப்பேட்டை: அரக்கோணம் பொறியியல் பட்டதாரிகள், 5 நிமிடத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து, ஒரே நேரத்தில் 2 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யும் வகையில் குறைந்த செலவில் இயந்திரம் தயாரித்து அசத்தியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் குறிஞ்சி நகரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் அனிஷ்மேத்யூ, நரேஷ்குமார் ஆகியோர் தங்களது பெருமுயற்சியால் தயாரித்த ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை நேற்று ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தினர். அதனை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், ஆர்டிஓ இளம்பகவத் ஆகியோர் பார்வையிட்டு இளைஞர்களை பாராட்டினர்.

ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து ஏரோ ஸ்பேஸ் பொறியியல் பட்டதாரி அனிஷ்மேத்யூ கூறியதாவது: நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், மனித சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. காற்றில் உள்ள ஆக்சிஜன், நைட்ரஜன் கம்ப்ரசர் மோட்டாரைக் கொண்டு சிலிண்டர்களில் சேமிக்கப்படும். தொடர்ந்து, சுத்தமான ஆக்சிஜன் மட்டும் சிலிண்டர்களில் சேமிக்கப்பட்டு, நைட்ரஜன் தானாக வெளியேற்றப்படும்.

3 முதல் 5 நிமிடங்களில் இந்த இயந்திரத்தின் மூலமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் ஒரே நேரத்தில் 2 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கலாம். 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் இந்த ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.  இந்த அமைப்பை பெரிய அளவிலும் தயாரித்து மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜனை சப்ளை செய்யலாம். இந்த ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரம் தயாரிப்பதற்கான தொகையை வாங்கிக் கொடுத்தால், இலவசமாக தயாரித்து வழங்குவோம். மேலும் தனிநபர்களுக்கு தயாரித்து வழங்க உள்ளோம். ஆக்சிஜன் இயந்திரம் வேண்டுவோர் கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என்றனர்.

Related Stories:

>