ஜெகன்மோகனை விமர்சித்த எம்பி ராஜுக்கு ஜாமீன் மறுப்பு: ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து வருகிறார் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி. இந்த நிலையில்,அவரது கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் கனுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அவரை கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும் சமீபத்தில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய பெயிலை ரத்து செய்ய வேண்டுமென்றும், அவர் பெயில் விதிமுறைகளை மீறுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், கடந்த 15ம் தேதி ஆந்திர மாநில குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறையால் எம்பி கனுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜு அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும், குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறையினர் அவர் மீது, ஜெகன்மோகன் தலைமையிலான அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும், மக்கள் மத்தியில் வெறுப்பை தூண்டியதகாவும் கூறி தேசத்துரோக வழக்கை பதிவுசெய்துள்ளனர். இதைத்தொடர்ந்து வழக்கில் இருந்து ஜாமீன் கேட்டு கனுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜூ தொடர்ந்த வழக்கை ஆந்திரா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராகவும், ஜாமீன் வழங்கக்கோரியும் கனுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜூ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த வழக்கானது, நீதிபதிகள் வினீத் சரண் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘‘அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் விதமாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கனுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜூவை பொருத்தமட்டில் உடல் உபாதைகளால் அவதியடைந்து வருகிறார். மேலும் அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டலும் வந்த வண்ணம் இருக்கிறது. அதனால் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும்’’ என வாதிட்டார். இதற்கு மாநில அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில், ‘‘கனுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜூவை செகந்தராபாத் பகுதியில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு அவருக்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்’’ எனக் கூறி, வழக்கை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதில் கனுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜூ ஜாமீன் கேட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories:

>