கொரோனா நிவாரண நிதிக்கு சன் டிவி குழுமம் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கலாநிதி மாறன் 10 கோடி வழங்கினார்

சென்னை: கொரோனா பேரிடர் தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன் 10 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்துள்ள சூழலில், அதை எதிர்கொள்ள தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள, முதல்வர் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு அனைத்துத் தரப்பினருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து, முதல்வர் நிவாரண நிதியாக 10 கோடி ரூபாயை சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன் வழங்கினார். சன் டிவி குழுமம் சார்பில் நிவாரண நிதி வழங்கியபோது துர்கா ஸ்டாலின், காவேரி கலாநிதி மாறன் ஆகியோரும் உடனிருந்தனர்.

 பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் முன்னிலையில் இருக்கும் சன் டி.வி. குழுமம், குஜராத் பூகம்பம், ஒடிஷா புயல், தமிழகத்தில் கஜா மற்றும் ஒக்கி புயல், சென்னை பெருவெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களிலும் மக்கள் துயர் தீர்க்க தாராளமாக நிதி உதவிகளை அளித்திருக்கிறது. கொரோனா முதல் அலை தாக்கத்தின்போதும், மத்திய, மாநில அரசுகளின் நிவாரண நிதிகளுக்கு சன் டி.வி. நிதி உதவி அளித்தது. பேரிடர் நிவாரண நிதி, சமூக மேம்பாடு, ஏழை, எளிய மக்களுக்கான நலத் திட்டங்கள் போன்ற பணிகளுக்கு சன் டி.வி. குழுமமும், சன் பவுண்டேஷனும் இணைந்து இதுவரை 160 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: