மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் கொரோனாவுக்கு பலியான தங்கையின் சடலம் எங்கே?.. டெல்லி போலீசில் சகோதரன் புகார்

புதுடெல்லி: டெல்லி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்ற நிலையில் தனது தங்கையின் சடலத்தை கண்டுபிடித்து தருமாறு, அவரது சகோதரன் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். தலைநகர் டெல்லியின் திருநகர் பகுதியில் வசிக்கும் சித்தார்த் குமாரின் சகோதரி தீபிகாவுக்கு (38) கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், தீபிகாவை லோக்நாயக் மருத்துவமனையில் அவரது சகோதரர் சித்தார்த் அனுமதித்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி தீபிகா மருத்துவமனையிலேயே இறந்தார். கொரோனா சடலத்திற்கான சில விதிமுறைகள் இருப்பதால், இரண்டு நாட்களுக்கு பின்னர் இறந்த உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டது.

இதற்கிடையில், சித்தார்த்தின் உடல்நிலையும் மோசமடைந்தது. அவர் சுமார் 20 நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். உடல் குணமடைந்த பிறகு, மருத்துவமனையில் இருந்து சகோதரியின் சடலத்தை எடுத்துவந்து தகனம் செய்ய முயன்றார். ஆனால், சகோதரியின் சடலம் பிணவறையில் இல்லை. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது, அலட்சியமாக பதில் அளித்தனர். பெரும் மன உளைச்சலுக்குள்ளான சித்தார்த், சகோதரியின் சடலத்தைக் கண்டுபிடிக்குமாறு ஐபி எஸ்டேட் போலீசாரிடம் கெஞ்சினார். இதுெதாடர்பாக போலீசில் அளித்த புகாரில், ‘ஏப்ரல் 15ம் தேதி எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் எனது சகோதரி இறந்துவிட்டார்.

அவர் இறந்து 20 நாட்களுக்குப் பிறகு, அவரது சடலத்தை வாங்கிச் செல்ல மருத்துவமனைக்கு சென்றேன், ஆனால் அங்கு சடலம் இல்லை. எனவே, எனது சகோதரியின் சடலத்தை கண்டுபிடித்து தர வேண்டும்’ என்று கோரியுள்ளார். இதுெதாடர்பாக மத்திய மாவட்ட கூடுதல் துணை ஆணையர் ரோஹித் மீனா கூறுகையில், ‘பாதிக்கப்பட்டரிடம் பெறப்பட்ட புகார் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

Related Stories: