×

44 நாடுகளில் பரவியது `பி1.617’ வகை உருமாறிய வைரஸ்; இந்தியாவில் கொரோனாவால் 7.5 லட்சம் பேர் பலி?.. இறப்பை குறைத்து காட்டுவதாக வாஷிங்டன் பல்கலை ‘ரிப்போர்ட்’

வாஷிங்டன்: தடுப்பூசி விஷயத்தில் இந்திய அரசு அலட்சியமாக செயல்பட்டதால், 44 நாடுகளில் இந்தியாவில் உருமாறிய `பி1.617’ வகை வைரஸ் புகுந்துள்ளது. இந்தியாவில் பலியானோரின் உண்மையான எண்ணிக்கை 7.5 லட்சமாக இருக்கும் என்று ஹெல்த் மேட்ரிக்ஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், தினசரி பாதிப்பு 3.5 லட்சத்தை கடந்தும், தினசரி இறப்பு 4 ஆயிரத்தை தாண்டியும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ், உலகளாவிய சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ‘பி1.617’ வகை உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது நேபாளம், அமெரிக்கா, ஐரோப்பா உட்பட 44 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய சுகாதார கல்வி மையத்தின் துணை இயக்குநர் அமிதா குப்தா கூறுகையில், ‘இந்தியாவில் 0.1% பாசிடிவ் மாதிரிகள் மட்டுமே மரபணு மாற்றப்பட்டதாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன’ என்றார். மேலும், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பேராசிரியர் பினா அகர்வால் கூறுகையில், ‘தடுப்பூசிகள் மற்றும் மருந்துவ முறைகளை கையாள்வதில் நாடுகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வால் தொற்றுநோய் பரவல் மீண்டும் தலைதூக்கி வருகிறது. இந்திய அரசு போதுமான தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்கவும், தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்தவும் தவறிவிட்டது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிக்கு தேவையான மூலப்பொருட்களை அமெரிக்கா பல மாதங்களாக நிறுத்தியது. இருப்பினும், இப்போது ஜனாதிபதி ஜோ பிடன் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் அலை ஏற்பட்ட காலகட்டத்தில் ஒரு லட்சம் பேர் இறந்தனர். ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள இரண்டாவது அலையில் மோசமான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. ஆப்பிரிக்க நாடுகளின் நிலைமையை காட்டிலும் இந்தியாவின் நிலைமை மேலும் மோசமடையக்கூடும். இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய ‘பி1.617’ வகை வைரஸ் வகைகள் அமெரிக்கா, ஐரோப்பா, நேபாளம், அங்கோலா, ருவாண்டா, மொராக்கோ உட்பட 44 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன’ என்றார்.  

கொரோனா வைரஸ் வேகமாக பரவும் உண்மையான வரைபடத்தை இந்தியா இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மே மாதத்தில் பல லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கிராமப்புறங்களில் தொற்று வேகமாக பரவுவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஹெல்த் மேட்ரிக்ஸ் மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பல லட்சம் மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள். இறப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது. மொத்த இறப்பு எண்ணிக்கை 2.74 லட்சம் என்று அரசின் புள்ளி விபரம் கூறினாலும் கூட, சரியான எண்ணிக்கை 7.5 லட்சமாக இருக்க வாய்ப்புள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இறப்பு எண்ணிக்கை சுமார் 1.5 மில்லியனாக (15 லட்சம்) அதிகரிக்கும்’ என, அதில் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் வூகானிலிருந்து 2019 நவம்பரில் இருந்து பரவத்தொடங்கிய இந்த கொரோனா வைரஸ், இந்தியாவில் `பி1.617 வகை’ வைரஸ் கிருமியாக மாற்றமடைந்து வேகமெடுத்துப் பரவிவருகிறது. உருமாற்றம் அடைந்திருக்கும் இந்த `பி1.617’ வகை வைரஸின் வீரியமும் பரவும் தன்மையும் முதல் அலையைவிடப் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இந்தியாவிலிருந்து இதுவரை பி1.617, பி1.617.2 வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், மிகப்பெரிய ஆபத்தையும், தீவிரமான பரவலையும் தரக்கூடிய பிரிட்டனில் கண்டறியப்பட்ட ‘பி1.1.7’ வைரஸ்களும் இந்தியாவில் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : India ,Washington University , The `B1,617 'type mutated virus spread to 44 countries; 7.5 lakh killed by corona in India? .. Washington University 'report' underestimates deaths
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...