இஸ்ரேல்-காசா மோதல் விவகாரம்; அமைதியை நிலைநிறுத்த வேண்டும்: ஐ.நா கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

நியூயார்க்: இஸ்ரேல்-காசா மோதல் விவகாரத்தில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும் என்று ஐ.நா கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தி உள்ளது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையிலான மோதல் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை காசாவில் 153 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்களில் 39 சிறுவர்களும் 22 பெண்களும் அடங்குவர். அதேபோல் ஹமாஸ் போராளிகளின் ராக்கெட் தாக்குதல்களில் தங்கள் தரப்பில் 2 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் கூறுகிறது.‌ இதற்கிடையே,  காசா- இஸ்ரேல் மோதல் தொடர்பாக 57 உறுப்பு நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் காணொலிக் காட்சி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தியது.

இந்நிலையில், இஸ்ரேல்-காசா மோதல் தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசுகையில், ‘இஸ்ரேல்-காசா இடையிலான மோதலில் இந்தியத் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் உயிரிழந்த அனைவரின் மறைவுக்கும் இந்திய அரசு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது. இந்த மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை உடனடியாக தணிப்பது அவசியம். இருதரப்பினரும் மிகுந்த கட்டுப்பாட்டுடனும், பதற்றத்தை மேலும் மோசமாக்குவதற்கான நடவடிக்கைகளை தவிர்த்தும் ஏற்கெனவே நிலவிய சூழலை தன்னிச்சையாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபடாமலும் இருக்க வேண்டும்.

இருதரப்பினர் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநிறுத்த அனைத்து ராஜ்ஜீய முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கிறது. தற்போதைய மோதல் சம்பவங்கள் இஸ்ரேல், பாலஸ்தீன அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தையை உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும்’ என்று பேசினார்.

Related Stories: