தமிழகத்தில் 418 ரயில் நிலையங்களில் ‘வைஃபை’: ரயில்வே அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: தமிழகத்தில் இதுவரை 418 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களை டிஜிட்டல் முறையுடன் இணைப்பதற்காக, ‘வைஃபை’ வசதிகள் இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் தொலைதூர ரயில் நிலையங்களுக்கும் வைஃபை வசதியை கொண்டு சேர்க்க முடியும். நாட்டிலேயே முதன்முறையாக கடந்த 2016ம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்ட இந்த வைஃபை சேவை, நேற்று முன்தினம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தின் ஹசாரிபாக் நகர் ரயில் நிலையத்தில் ‘வைஃபை’ வசதி ஏற்படுத்தப்பட்டது.

இது, இந்தியாவில் ‘வைஃபை’ ஏற்படுத்தப்பட்ட 6,000வது ரயில் நிலையமாகும். மேலும் அதே நாளில் ஒடிசா மாநிலத்தின் அங்குல் மாவட்டத்தில் உள்ள ஜராபதா ரயில் நிலையத்திலும் வைஃபை சேவை தொடங்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கங்களை  செயல்படுத்தும் வகையில் ரயில் நிலையங்களில் வைஃபை வசதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஊரக கிராமங்களில் டிஜிட்டல் பயன்பாடு  அதிகரிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு மேம்பட்ட அனுபவம் கிடைப்பதுடன், ஊரக மற்றும் நகர்ப்புற மக்களுக்கு இடையேயான டிஜிட்டல் இடைவெளி குறைக்கப்படும்.

நாடு முழுவதும் இதுவரை 6,000 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 418 ரயில் நிலையங்களில் வைஃபை சேவை வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: