×

கோவிஷீல்டு 2வது டோஸ் இடைவெளி நீடிப்பால் ‘கோ-வின்’ இணையதள முன்பதிவு முறையில் மாற்றம்: அலைக்கழிப்பு புகாரால் நடவடிக்கை

புதுடெல்லி: கோவிஷீல்டு 2வது டோஸ் இடைவெளி நீடிப்பால் ‘கோ-வின்’ இணையதளம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மற்றும் 2வது டோஸ்களுக்கான இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக நீட்டிக்கும்படி டாக்டர் என்.கே.அரோரா தலைமையிலான ‘கோவிட்’ செயற் குழு மத்திய அரசு பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை தற்போது மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

இந்த மாற்றங்கள் தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. மேலும், தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளி அதிகரிக்கப்பட்டதால், அதற்கேற்றால் போல் முன்பதிவு செய்ய பயன்படுத்தப்பட்டு வரும் ‘கோ-வின்’ இணையதளமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘கோவிஷீல்டு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவதற்காக, கோ-வின் இணையளத்தில் 84 நாட்கள் இடைவெளிக்கு குறைவாக முன்பதிவு செய்தவர்கள், தடுப்பூசி போடப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதாக செய்திகள் வெளியாயின.

அதன் தொடர்ச்சியாக, கோ-வின் இணையதளத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இனிமேல் ஆன்லைன் மூலம் இரண்டாவது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள, சம்பந்தப்பட்ட பயனாளிகள் 84 நாட்களுக்கு குறைவாக முன்பதிவு செய்ய முடியாது. மேலும், 2வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு, ஆன்லைன் மூலம் ஏற்கனவே செய்யப்பட்ட முன்பதிவுகளும் செல்லுபடியாகும். அவற்றை கோ-வின் இணையதளம் ரத்து செய்யவில்லை. மேலும், பயனாளிகள், தங்கள் முன்பதிவு தேதியை முதல் டோஸ் போட்ட தேதியிலிருந்து, 84 நாட்களுக்குப்பின் தேதியில் மாற்றிக் கொள்ளலாம்.

இந்த மாற்றத்துக்கு முன்பாக, கோவிஷீல்டு 2வது டோஸ் ஊசிக்கு ஆன்லைன் மூலம் செய்யப்பட்ட முன்பதிவை பின்பற்ற வேண்டும். ஏற்கனவே முன்பதிவு செய்த பயனாளிகள், 2வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட வந்தால், அவர்களை திருப்பி அனுப்ப கூடாது. இந்த மாற்றம் தொடர்பாக, பயனாளிகளுக்கு தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.


Tags : Covshield 2nd Dose Break Extension Changes 'Co-Win' Website Booking System: Action on Disruption Complaint
× RELATED நாம் ஓட்டு போட்டோம் என்று கூறுவதில்...