தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படாததால் புதிய கல்வி கொள்கை குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை!: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!!

சென்னை: தமிழக அரசின் கோரிக்கைகளை ஏற்காததால் புதிய கல்வி கொள்கை குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு பங்கேற்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். புதிய கல்வி கொள்கை, இணையவழி கல்வி ஆகியவை குறித்த இணையவழி ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்கள் பங்கேற்க மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் காணொலி மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட கூட்டத்தில் அமைச்சர்களை பங்கேற்க அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

ஆனால் மத்திய அரசு எந்த பதிலும் அளிக்காததால் ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது. புதிய கல்வி கொள்கையில் இடம் பெற்றுள்ள பாதகமான அம்சங்களை எடுத்து கூற வாய்ப்பு வழங்கப்படாததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். புதிய கல்வி கொள்கைகள், திமுக கூறும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இப்பிரச்னையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

Related Stories:

>