கொரோனா பலி அதிகரித்து வரும் சூழலில் நவீன தகன மேடை திறக்கப்படுமா?கட்டி முடித்து 8 வருடமாக மூடி கிடக்கிறது

மேலூர் : அரசு பணத்தில் மேலூர் நகரில் அமைக்கப்பட்ட நவீன தகன மேடை 8 வருடமாக மூடியே இருப்பதால் பாழடைந்து வருகிறது.

மேலூர் நகர் பெரியகடை வீதியில் உள்ள பட்டாளம் சுடுகாட்டில் 2012ல் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. கட்டி முடித்து 8 வருடங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை.

இது குறித்து அதிகாரிகளிடம் அப்போது கேட்ட போது, புதிய தகன மேடையில் சோதனை அடிப்படையில் ஒரு உடலை வைத்து எரித்து பார்த்த பிறகே முழு பயன்பாட்டிற்கு திறக்க முடியும் என கூறினர். போலீஸ் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனாதை பிணத்திற்கு சொல்லி வைத்துள்ளதாகவும் கூறினர். ஆனால் 3 பிணங்களை எரியூட்டிய பிறகும் இதுவரை திறக்கப்படவில்லை.

இது குறித்து வக்கீல் ஸ்டாலின் என்பவர் தொடுத்த பொதுநல வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. தற்போதைய கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனாவில் இறப்பவர்களை பெரும்பாலும் எரியூட்டும் நிலையில், மேலூரில் மின் தகனமேடை இருந்தும் எவ்வித பயனும் இல்லாமல் உள்ளது. மதுரையில் மின் மயானத்தில் டோக்கன் அடிப்படையில் பிணங்கள் எரியூட்டப்பட்டு வரும் நிலையில், இந்த தகன மேடையை திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘அதிமுக அரசில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடையில் சரிவர தகனம் செய்ய முடியவில்லை என்றால், அமைக்கப்பட்ட தகன மேடை தரமானதாக இல்லை என்று தானே அர்த்தம். தற்போது வரை பழைய கொட்டகையில் விறகுகளை கொண்டே தகனம் செய்வதும், குழி தோண்டி புதைப்பதும் இங்கு தொடர்கிறது.

பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வராமலேயே 8 வருடமாக பூட்டிக் கிடக்கும் இந்த மயானம் கொஞ்சம் கொஞ்சமாக பாழடைந்து வருகிறது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நவீன எரிவாயு தகன மேடையை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: